Monday, April 1, 2013

கல்லூரிகள் திறக்கப்படுவதில் தொடரும் குழப்பம்!


கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிப்போவதால் செமஸ்டர் தேர்வுகள் 15 நாட்களுக்கு மேலாக தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அதே நேரம் விடுமுறை தொடர்ந்தால் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாது என்பதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகள் வருகிற 3-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் வெளியிட்ட அறிவிப்பில் ''அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 3-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் இதே தேதியில் திறக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க முடியாது: மேர்வின் சில்வா!

Monday, April 01, 2013
இலங்கை::இலங்கை யாத்திரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக மிக விரைவில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், சிங்கள் பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க முடியாது.

வழிப்பாட்டு தளங்களுக்கு இலங்கையர்கள் உட்பட மத தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்த இரத்த உறவுகள் நாங்கள். இந்த இரத்தம் எப்போதும் பின்நோக்கி சென்றதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில்; மாற்றமில்லை: தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய!

Monday, April 01, 2013
இலங்கை::வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில்; மாற்றமில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற பிரதிநிதகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வன்னி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களுக்கான பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 219196 வாக்காளர்கள் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, பிரதி தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் அதிகாரம் பிரதித் தேர்தல் ஆணையாளருக்கு கிடையாது எனவும், இது குறித்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பதுளை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து நுவரெலியா மாவட்டத்திற்கு அதனை சேர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் எது விபரீதம்? அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தமிழரசுக்கட்சி தலைவர்கள் வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள்!

Monday, April 01, 2013
இலங்கை::அரச படைகளும், சிங்கள மக்களும் அராஜகங்கள் புரிவதை உடன் கைவிட வேண்டும். இல்லையேல் வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கர்ஜித்திருப்பதாக தமிழரசுக்கட்சிப் பத்திரிகையில் நேற்று செய்தி வெளியாகியிருக்கிறது. என்ன விபரீதங்கள், அவை எப்படி நடக்கும், யார் அதைச் செய்யப்போகிறார்கள் என்ற விவரங்களை வழக்கம்போல அவர் வெளியிடவில்லை; அந்தப் பத்திரிகையும் சொல்லவில்லை. அரசையும் அரச படைகளையும் சிங்கள மக்களையும் நடுநடுங்க வைப்பதற்கு இந்த எச்சரிக்கையே போதும் என்று நினைத்தாரோ என்னவோ! நம் தலைவர்களா கொக்கா என்னும் வீரக் கிறுகிறுப்பை தமிழ் மக்களின் தலைகளுக்குள் ஏற்றிவிட்டால் போதாதா?

அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தலைவர்கள் இத்தகைய வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களும், சிங்களவர்களை எங்கள் கால்களில் பணிந்து கிடக்க வீழ்த்திவிட்டு இந்த நாட்டில் நாமே தனிப்பெருங்குடிகளாய் வாழப்போகிறோம் என்ற கற்பனையிலேயே காலத்தை ஓட்டப் பழகியிருக்கிறார்கள்.

போன மாதம் வரை, ஜெனீவாவில் ஒரு பெரிய பொறி செய்து கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசு அதற்குள் மாட்டுப்பட்டு கீச் கீச் சென்று கத்தப்போவதை தமிழ்மக்கள் எல்லோரும் கேட்டு இன்புற வைக்கிறோம் பாருங்கள் என்று முழக்கங்களும் கர்ஜனைகளும் வீர எச்சரிக்கைகளுமாக எழுதியும் பேசியும் வந்தார்கள். அந்த மாநாடு முடிந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. இவர்களது பொறியில் இருந்து இலங்கை தப்பியது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இன்னும் இவர்களிடமிருந்து வரவில்லை. ஜெனீவா போனது தெரியும் வந்தது தெரியாது என்று இவர்கள் பம்மிவிட்டதைப் பார்த்து, வெற்று வீரவசனங்களால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்ட வெட்கத்திலிருக்கிறார்களோ என்று நாம் தான் ஏமாந்துவிட்டோம்.

அவர்களுக்கேது வெட்கம்? இதோ, இலங்கை அரசே எச்சரிக்கிறோம், வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். தொட்டுப் பாரு அப்புறம் தெரியும் என்று நாரியை வளைத்துச் சுட்டுவிரலை ஆட்டியபடி சொல்லும் சாட்சாத் வடிவேலுதான் மறுபடியும் நினைவில் வந்து தொலைக்கிறார். இந்த வெட்கங்கெட்ட வீரப்பாவனைகளை இவர்கள் ஒரு போதும் நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தான் இதற்கெல்லாம் புல்லரித்துக் கனவுகளில் சஞ்சரிக்காமல், நடை முறைச் சாத்தியங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இன்றைய உலக ஒழுங்கில், எமது இந்த நாட்டுக்குள் பெரும்பான்மை இனத்துக்குச் சிறுபான்மை இனம் சவால்கள் விட்டுத் துள்ளிமிதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்ற யதார்த்த உண்மையை, எங்கள் ரோசங்கள் நடப்புகளை விலக்கி ஆழ யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் நமக்கு இழுக்கோ சரணாகதியோ தாழ்வோ அல்ல. நடக்கக்கூடியதை விளங்கிக் கொண்டு, நாம் யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்பதை நிறுவும் தந்திரோபாயத்திற்கு மாறுதல் என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கு தனிநாடு ஒன்று அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கதைகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் இனங்களிடையேயான பிளவை மேலும் மேலும் வளர்த்து வருவதும், வெறுப்பை அள்ளி வீசிக் கொண்டிருப்பதும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது; இடர்களைத்தான் தந்து கொண்டிருக்கும். இப்படியே நமது வாழ்வை வலிந்து வதைபட விடும் இவர்களது ஏமாற்று நீடிக்க அனுமதிக்கக் கூடாது.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவு செய்யும்: நாராயணசாமி!

Monday, April 01, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். காமன்வெல்த் மாநாடு வரும் நவம்பரில்தான் நடைபெறவுள்ளது. அதற்கு பல மாதங்கள் இருப்பதால் இந்தியாவின் நிலை குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார்.

இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்: மைத்திரிபால சிறிசேன!

Monday, April 01, 2013
இலங்கை::இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையாகக் கண்டிப்பதுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறி னார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 30 வருட கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அமைதியைக் குழப்பும் வகையில் சில குழுக்கள் செயற்படுகின்றன.

இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தின் உயிர்களுக்கோ அல்லது அச்சமூகத்தின் தனிப்பட்ட அல்லது பொதுச் சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எந்தவொரு நபருக்கும் எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்.

கடந்த தினங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையாகக் கண்டிக் கின்றோம். இவ்வாறான சம்பவங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் நாம் மறுக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்புவைத்திருக்க வேண்டிய தேவையும் அரசுக்கு இல்லை. கடந்தகால யுத்தம் காரணமாக நாடு பின்னோக்கிச் சென்றிருக்கும் சூழலில் நாட்டைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையிலேயே சமாதானச் சூழலைக் குழப்பும் செயற் பாடுகளில் சில குழுக்கள் முயற்சிக்கின்றன.

இதன் ஊடாக அரசியல் இலாபம் தேடுவதற்கும் சிலர் முயற்சிக்கின்றார். நாட்டில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சிகள் எடுக்கின்றனர்.

எனினும், இவ்வாறான குழப்ப சூழ்நிலைகள் தொடராமல் இருப்பதற்கு பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகி யோர் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அத்துடன், இனங்களுக்கிடையில் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையிலான விடயங்களில் கலந்துகொள்ளவோ, ஈடுபடவோ வேண்டாம் என நாட்டு மக்களிடம் அரசாங்கம் என்ற ரீதியிலும், சிரேஷ்ட அரசியல்வாதி என்ற ரீதியிலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.