Friday, March 27, 2015

தாய்லாந்தில் ரெயில்கள் மோதல்: 52 பேர் காயம்!

Friday, March 27, 2015
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டென் சாய் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 10.15 மணியளவில் அயுத்தயா மாகாணத்தில் சென்ற போது நின்று கொண்டிருந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.
 
இதனால் பாங்காக்–டென்காய் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.
 
இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 52 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
காயமடைந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டினர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை சேர்ந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ளனர்.
 
 


ஜெர்மன் விமான விபத்து விசாரணையில் திருப்பம்: துணை விமானிக்கு மன அழுத்த நோய் இருந்ததாக தகவல்!

Friday, March 27, 2015
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் பதிவான குரலை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பூட்டப்பட்ட விமானியறையை வேகமாக தட்டியபடி கதவை திறக்க சொல்லும் ஒரு விமானியின் குரல் பதிவு கிடைத்துள்ளது.

அதாவது காக்பிட்டில் இருந்து விமானி வெளியே சென்ற சமயம் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும், அப்போது துணை விமானி லுபிட்ஸ் மட்டுமே உள்ளே இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விமானி காக்பிட் அறையைத் திறக்கும்படி பலமுறை கதவைத் தட்டியும் துணை விமானி லுபிட்ஸ் திறக்காததால், அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில், காக்பிட்டில் இருந்த துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஜெர்மன் பில்டு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2009-ம் ஆண்டு கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர்களிடம் தொடர்ந்து உளவியல் ஆலோசனை பெற்று வருவதாகவும் பில்டு டெய்லி கூறியுள்ளது. ஜெர்மன் விமான போக்குவரத் ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பயிற்சியின்போது அந்த துணை விமானி லுபிட்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், 2013ல் அவர் மீண்டும் ஏர்பஸ் ஏ320 விமானத்தை இயக்குவதற்கு தகுதி பெற்றதாகவும் லூப்தான்சா தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே, மன அழுத்தத்தில் இருந்த அவரால் எப்படி விமானத்தை சரியாக இயக்க முடியும்? அவருக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என்று புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன: மஹிந்த ராஜபக்ஸ!

Friday, March 27, 2015
நாட்டில் புலிகளுக்கு  ஆதரவான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.என்.பி. கட்சி, மஹஜன ஐக்கிய முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரி கூட்டங்களை நடத்தி வருகின்றது.

இந்த கூட்டத் தொடரின் மற்றுமொரு கூட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரியில் நடைபெற்றது. நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்பட மக்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் புலிகளுக்கு  ஆதரவான தேசவிரோத சக்திகளின் கரம் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போராடுவதற்கு தேவையான தைரியம் எம்மிடம் உள்ளது என்பதனை சூழ்ச்சிகாரர்களுக்கு புரியச் செய்ய வேண்டுமென  அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை, அபிவிருத்தி அடைந்த நாடுகள் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடும் மழையையும் கருத்திற் கொள்ளாது இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத அதிகாரங்களை நீக்கியதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்: தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர!

Friday, March 27, 2015
புலிகளுக்கு  ஆதரவான பிரிவினைவாத அதிகாரங்கள் நீக்கப்பட்டதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஐக்கியத்திற்கு 13ம் திருத்தச் சட்டம் பெரும் சவாலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவினைவாத அதிகாரங்கள் அனைத்தும் முதலில் நீக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம், மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி நேரடியாக வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாண முதலமைச்சர் பெற்றுக் கொள்வதற்கான உரிமை போன்றனவற்றை ரத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரங்களை ரத்து செய்யாது, 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

Tuesday, March 24, 2015

பிரான்சின் தெற்கு பகுதியில் 150 பயணிகளுடன் ஏ320 ரக விமானம் நொறுங்கி விபத்து!

 Tuesday, March 24, 2015
பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 இந்த பயணிகள் விமானம் ஆல்ப்ஸ் மலை மீது பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நொறுங்கியதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெர்மனியின் டஸ்செல்டார்ப்பிலிருந்து, ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது.
 
விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
 
அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.
 
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தைப் பார்த்தால், விமானிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க நேரமே இருந்திருக்கவில்லை என்றும், ஏதோ ஒரு பேரழிவு நடந்திருக்கவேண்டும் என்பதையும் காட்டுவதாக  செய்தியாளர் கூறுகிறார்.
 
இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி தேசத்தவர்கள். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஏங்கலா மெர்க்கல் தான் இந்த விபத்து நடந்த இடத்துக்கு புதன்கிழமை செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Tuesday, March 24, 2015
எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
பல அரசியல் கட்சிகள் தமக்கு அழைப்பை விடுத்து வருவதாகவும், ஆனால், ஏனைய அரசியல் கட்சியின் கீழ் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்து தெரிவித்துள்ளார். மாத்தறை, தெலிஜ்ஜவில சமரசிங்ஹாராம அறநெறிப் பாடசாலையின் நேற்று மாலை, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் தீர்மானங்களை நான் தற்போது எடுக்கப் போவதில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த தேசிய அரசாங்கம் பற்றி பேசும் போது சிலர் சிரித்தனர். கேலி செய்தனர். ஆனால், இன்று உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தை நான் அவ்வாறு இழிவுபடுத்தப் போவதில்லை. வாழ்த்துக்களையே தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
 
தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 1, 2015

மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை: முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Sunday, March 01, 2015
மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அரசமைப்பு திருத்த யோசனை குறித்து ஸ்ரீலங்கா சுதச்திரக்கட்சியின் இணக்கமின்றி அவர்கள் இறுதி முடிவெடுத்தால் நாங்கள் அதனை ஆதரிக்கமாட்டோம்.

அரசாங்கம் எங்களது ஆதரவை பெற்று ரணில்விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க முயல்கின்றது.

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக எங்களை பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களது அபிப்பிராயத்தை கருத்திலெடுக்காமல் செயற்படுவதற்கு அரசாங்கம் முயன்றால் அதன் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,அரசமைப்பின் 19 திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மதத்தை பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஓழிப்பு மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதன் காரணமாக அரசமைப்பிற்கான 19 திருத்தம் குறித்து நெருக்கடி நிலை உருவாகி உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண்பதற்காக தற்போது இலண்டனினுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைத் தலைவராகக் கொண்ட புதியகட்சி!

Sunday, March 01, 2015      
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடுவதற்கு தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய விடுதலைமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர்,இந்த கூட்டணியில் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 18 கட்சிகளின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதாகவும்,தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இவர்கள் ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவிப்பு எதனையும் விடுப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வீதியிலிறங்குவதற்கு தீhமானித்துள்ளதாகவும் ,இதன்படி 16 ம் திகதி ஹொரனையில் ஆர்ப்பாட்மொன்று இடம்பெறும் எனவும் சுதந்திரக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தான் நினைத்தபடி செயற்பட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அவர்கள் செயற்பட்டால் என்னசெய்வது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கின்றது, எனினும் பல ஊழல் அரசியல்வாதிகள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்க கூட்டமைப்பின் உறுப்பினர் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில தனக்கு தேர்தலில் போட்டியி;ட அனுமதி வழங்க்ப்படாவிட்டால் தான் அடுத்த கட்டட நடவடிக்கையை மேற்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிறைக்கைதியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.