Tuesday, August 20, 2019

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும் நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டது. எனினும் இதனை மீள நடத்துவதன் மூலம் பயணிகள் போன்று பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும்.
அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று  (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திரசில்வா இராணுவ படைகளின் பிரதானியாகவும் கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.