Saturday, September 10, 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதனால் அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 6, 2016

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர்   புலி பிரிவினைவாதிகளாலோ   புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல்:புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை: மலேசிய எச்சரிக்கை!


மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் நேற்றைய தினம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்கச் சென்று திரும்பிய போதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை வழியனுப்பி வைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்‌ச விகாரைக்குச் செல்லப் போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
நாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்று விட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்த போதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை.
எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.
 
எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.
 
இதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

Sunday, September 4, 2016

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான வழி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள!

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள புநந்திக்கடலுக்கான வழிபூ நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி- கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில்  புலிகளின் தலைவர்  பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2009 ஆம் ஆண்டு கமல் குணரட்ன கடமையாற்றினார்.

புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை:முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

மலேசியாவுக்கு செல்லும் முன்னரே, அங்கு தனக்கு எதிர்ப்பு இருக்கும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 
 
புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை. யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு எதிராகவே ஆர்ப்பட்டங்கள் நடத்தப்படுகின்றன.
 
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிகளவான மக்கள் ஆதரவுள்ள உறுப்பினர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கட்சியை விட்டு விரட்டுகின்றனர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 3, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சிறை பிடித்துச்செல்வது, மீன்பிடி கருவிகளைப் பறித்துக்கொண்டு வலைகளை வெட்டி வீசுவது என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
 
இந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 113 படகுகளையும்  உடனடியாக விடுவிக்கவும், கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
 
அதன் முதல்கட்டமாக இன்று மீன்பிடிதுறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

குருணாகலில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை!

குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
 
இதேபோன்று, மஹிந்த குழு சார்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்!

இறுதி கட்ட  போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற பான் கீ மூனிடம், சர்வதேச பங்களிப்பை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துவருகின்றமை குறித்து கேள்வி எழுப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த ஐ.நா செயலர், இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். நிலைமாறு நீதிப்பொறிமுறையில் முழுமையான அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கெடுத்துள்ளன என நான் நினைக்கின்றேன். பங்குபற்றுதல் மட்டத்தில் வேறுபாடுகள் காணப்படலாம். அல்லது முக்கியமான விடயங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வேறுபாடுகள் காணப்படலாம்.
 
ஐக்கிய நாடுகள் சபை மிக முக்கியமான மூன்று விடயங்களை நோக்கி பயணிக்கின்றது.ஒன்று நல்லிணக்கம், அதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அடுத்தது சர்வதேச நிலைமாறுநீதிப்பொறிமுறை, அந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நம்பகமான நிலைமாறு நீதிப்பொறிமுறையை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
நம்பகத்தன்மை என்பது தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமாக அமைய வேண்டும். சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளது. புரிந்துணர்வு குறைபாடு அல்லது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வேறுபாடுகள் காணப்படலாம். எனினும் நாம் சரியான திசையை நோக்கி முன்னோக்கி பயணிக்கின்றோம். நீங்கள் முன்னோக்கி பயணிக்கின்றீர்கள்.
 
பரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மன்னிப்பு வழங்குதல், பொறுமை காத்தல் உள்ளிட்ட இவை அனைத்தையும் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அரசாங்கமும் இந்த தருணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவற்றை நோக்கிய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். என குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு ஆதரவான மலேசியர்கள் போராட்டத்தில் இறங்கினர்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு  ஆதரவான    மலேசியர்கள் புத்ரா உலக வணிப மையத்திற்கு முன்புறம் போராட்டத்தில் இறங்கினர். ராஜபக்சே மலேசியாவில் இருக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கூறினர்.
 
ஆசியான் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய அளவில் புலிகளுக்கு  ஆதரவான    மலேசிய மக்கள் போலீஸ் புகார் அளித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். கடந்த வியாழன்கிழமையும் நேற்றும் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தின் முன் கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளுக்கு  ஆதரவான   அமைப்புகளைச் சேர்ந்த மலேசியத் தமிழர்கள் இன்றும் ஒன்று கூடி தனது அதிருப்தியினைத் தெரிவித்தனர்.
 
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று ஒன்று திரண்ட வேளை, "ராஜபக்சே மாநாட்டிலோ அல்லது நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கோஷமிட்டனர்.
 
மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த வேளை, போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர்.
நேற்று ஏற்பாட்டுக்குழு சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், மாநாட்டு மண்டபத்தில் ராஜபக்சே இல்லை என்று கூறிய ஒரு மணிநேரத்திற்குள் மாநாட்டு மேடையில் ராஜபக்சே உரையாற்றிய புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.