Monday, April 01, 2013
சென்னை::தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர் சமூகத்தினர், தொடர்ந்து தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் தற்போது மூடப்பட்டு இருக்கும் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்னும் குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், தனி ஈழம் அமைக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு மாணவர்களோ அல்லது பொதுமக்களோ பாதிக்கப்படக்கூடாது என்று கருதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
இதனால் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்துவந்த மாணவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
கல்லூரிகள் மூடபட்டிருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் கல்லூரிகளால் மாணவர்களின் தேர்வு தேதிகள் குறைந்தபட்சம் 15 நாட்களாவது தள்ளிபோகும் வாய்ப்பு உள்ளதென தெரிகிறது.
மேலும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் நலனுக்காக கல்லூரிகள் திறக்கப்படும் தேதி 3 நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிகிறது.
என்ஜினீயரிங் கல்லூரிகள் 3-ந்தேதி திறப்பு: அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்குரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. செய்முறைத் தேர்வும் நடத்தி முடிக்கப்படவில்லை. எனவே கல்லூரி நிர்வாகிகளும் பெரும்பாலான மாணவர்களும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிப்போவதால் செமஸ்டர் தேர்வுகள் 15 நாட்களுக்கு மேலாக தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அதே நேரம் விடுமுறை தொடர்ந்தால் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாது என்பதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகள் வருகிற 3-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் வெளியிட்ட அறிவிப்பில் ''அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 3-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் இதே தேதியில் திறக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment