Monday, April 1, 2013

உண்மையில் எது விபரீதம்? அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தமிழரசுக்கட்சி தலைவர்கள் வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள்!

Monday, April 01, 2013
இலங்கை::அரச படைகளும், சிங்கள மக்களும் அராஜகங்கள் புரிவதை உடன் கைவிட வேண்டும். இல்லையேல் வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கர்ஜித்திருப்பதாக தமிழரசுக்கட்சிப் பத்திரிகையில் நேற்று செய்தி வெளியாகியிருக்கிறது. என்ன விபரீதங்கள், அவை எப்படி நடக்கும், யார் அதைச் செய்யப்போகிறார்கள் என்ற விவரங்களை வழக்கம்போல அவர் வெளியிடவில்லை; அந்தப் பத்திரிகையும் சொல்லவில்லை. அரசையும் அரச படைகளையும் சிங்கள மக்களையும் நடுநடுங்க வைப்பதற்கு இந்த எச்சரிக்கையே போதும் என்று நினைத்தாரோ என்னவோ! நம் தலைவர்களா கொக்கா என்னும் வீரக் கிறுகிறுப்பை தமிழ் மக்களின் தலைகளுக்குள் ஏற்றிவிட்டால் போதாதா?

அறுபதுக்கும் மேற்பட்ட வருசங்களாக இந்தத் தலைவர்கள் இத்தகைய வீரவசனங்களைப் பேசிப் பேசியே இனங்களுக்கிடையே பகையை மூட்டி மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களும், சிங்களவர்களை எங்கள் கால்களில் பணிந்து கிடக்க வீழ்த்திவிட்டு இந்த நாட்டில் நாமே தனிப்பெருங்குடிகளாய் வாழப்போகிறோம் என்ற கற்பனையிலேயே காலத்தை ஓட்டப் பழகியிருக்கிறார்கள்.

போன மாதம் வரை, ஜெனீவாவில் ஒரு பெரிய பொறி செய்து கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசு அதற்குள் மாட்டுப்பட்டு கீச் கீச் சென்று கத்தப்போவதை தமிழ்மக்கள் எல்லோரும் கேட்டு இன்புற வைக்கிறோம் பாருங்கள் என்று முழக்கங்களும் கர்ஜனைகளும் வீர எச்சரிக்கைகளுமாக எழுதியும் பேசியும் வந்தார்கள். அந்த மாநாடு முடிந்து ஒரு வாரமும் ஆகிவிட்டது. இவர்களது பொறியில் இருந்து இலங்கை தப்பியது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இன்னும் இவர்களிடமிருந்து வரவில்லை. ஜெனீவா போனது தெரியும் வந்தது தெரியாது என்று இவர்கள் பம்மிவிட்டதைப் பார்த்து, வெற்று வீரவசனங்களால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்ட வெட்கத்திலிருக்கிறார்களோ என்று நாம் தான் ஏமாந்துவிட்டோம்.

அவர்களுக்கேது வெட்கம்? இதோ, இலங்கை அரசே எச்சரிக்கிறோம், வீண் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். தொட்டுப் பாரு அப்புறம் தெரியும் என்று நாரியை வளைத்துச் சுட்டுவிரலை ஆட்டியபடி சொல்லும் சாட்சாத் வடிவேலுதான் மறுபடியும் நினைவில் வந்து தொலைக்கிறார். இந்த வெட்கங்கெட்ட வீரப்பாவனைகளை இவர்கள் ஒரு போதும் நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை. மக்கள்தான் இதற்கெல்லாம் புல்லரித்துக் கனவுகளில் சஞ்சரிக்காமல், நடை முறைச் சாத்தியங்கள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இன்றைய உலக ஒழுங்கில், எமது இந்த நாட்டுக்குள் பெரும்பான்மை இனத்துக்குச் சிறுபான்மை இனம் சவால்கள் விட்டுத் துள்ளிமிதித்து ஒன்றும் சாதிக்க முடியாது என்ற யதார்த்த உண்மையை, எங்கள் ரோசங்கள் நடப்புகளை விலக்கி ஆழ யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் நமக்கு இழுக்கோ சரணாகதியோ தாழ்வோ அல்ல. நடக்கக்கூடியதை விளங்கிக் கொண்டு, நாம் யாருக்கும் தாழ்ந்தவர்களில்லை என்பதை நிறுவும் தந்திரோபாயத்திற்கு மாறுதல் என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கு தனிநாடு ஒன்று அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கதைகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் இனங்களிடையேயான பிளவை மேலும் மேலும் வளர்த்து வருவதும், வெறுப்பை அள்ளி வீசிக் கொண்டிருப்பதும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது; இடர்களைத்தான் தந்து கொண்டிருக்கும். இப்படியே நமது வாழ்வை வலிந்து வதைபட விடும் இவர்களது ஏமாற்று நீடிக்க அனுமதிக்கக் கூடாது.

No comments:

Post a Comment