Tuesday, February 17, 2015

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில்: மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் சுதந்திர கட்சியினர் பலர் கலந்து கொள்வர்: உதய கம்மன்பில!

Tuesday, February 17, 2015      
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நுகேகொடை பிரதேசத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 40க்கும் அதிகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வது நிச்சயம் என பிவித்துரு ஹெல உறுய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்து இந்த கூட்டதை ஒழுங்கு செய்துள்ளனர்.
 
இந்த கூட்டத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் அனுரபிரிய தர்ஷன யாப்பா ஏற்கனவே கூறியுள்ளார்.
 
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனசாட்சியின்படி செயற்படுமாறு கூறியுள்ளதாகவும் இதனால், தான் நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியினர் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Saturday, February 14, 2015

மைத்திரியின் தெரிவு சட்டவிரோதம்: பேராசிரியர் நளின் டி சில்வா!

Saturday, February 14, 2015      
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் செல்லுபடியற்றதென அரசாங்கம் முன்வைத்த வாதங்கள் சரியெனின், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதும் சட்டவிரோதமானதே என பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். “ஜாதிக பலய” அமைப்பினால், நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த இல்லாத நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய தவறாக நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் தவறானது என கருத முடியும் என்றால், அவரது நியமனம் தவறு என்றாலும் அது சம்பந்தமாக செயற்படக் கூடிய எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
 
மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமாயின், அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்பும் செல்லுப்படியற்றதாகி விடும் என்பதால், நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலும், மைத்தி்ரிபால சிறிசேனவின் நியமனம் செல்லுப்படியற்றதாகி விடும் எனவும் நளின் டி சில்வா வாததத்தை முன்வைத்தார்.
 
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததும் சட்டவிரோதமானதும் செல்லுப்படியற்றதுமான நியமனங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதேவேளை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட விதம் குறித்து நாடாளுமன்றத்திற்கே கேள்வி எழுப்ப முடியும், ஜனாதிபதியினால் கேள்வி எழுப்ப முடியாது. இதனடிப்படையில், மொஹான் பீரிஸூக்கே அந்த பதவி இன்னும் உரித்தானது. அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் இல்லாத நிலையில், இலங்கை இரண்டாக பிளவுப்படுத்து சமஷ்டி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மக்கள் பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என்றும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

Tuesday, February 10, 2015

92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்!!

Tuesday, February 10, 2015
92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 92 பேருக்கு சொந்தமான 129 சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் முதனிலை வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சீ வங்கியிடமிருந்து இந்த இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 92 பேரில் ஒரு தனிப்பட்ட இலங்கையர் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்துள்ள நபர்களின் நாடுகளைக் கொண்ட வரிசையில் இலங்கை 112 இடத்தை வகிக்கின்றது.

இந்த 92 இலங்கையர்களில் 88 பேர் 1974ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கணக்குகளை ஆரம்பித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்த 19000 பேர் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்யவில்லை என குறிப்பிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்வது சட்டவிரோதமானது இல்லை என்ற போதிலும், பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டு வைப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிச் சட்டங்களின் அடிப்படையில் கணக்கு பேணுவோரின் விபரங்களை இலகுவில் நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!

Tuesday, February 10, 2015
சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!
 
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக போலியாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமையை அரசாங்கம் எவ்வாறு ரத்து செய்து, மீளவும் பதவியில் அமர்த்தியதோ அதேபோன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இராணுவ பட்டங்களும் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தமது ஆசனத்தை வழங்குவதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்த போதிலும் தற்போது சற்று பின்வாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட தமது ஆசனத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளரும், சட்ட மா அதிபரும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்தால், தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கெட்டகொடவிடம் தாம் பதவியை யாசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்காகவோ பதவியை மீள அளிக்குமாறு கோரவில்லை எனவும், இந்த பதவி மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பது தமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டால் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, February 8, 2015

எதிர்வரும் மார்ச் மாதம் யாழுக்கும் மோடி செல்வார்

Sunday, February 08, 2015
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய் யும் இந் திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப் பாணத்துக்கும் விஜயம் செய் யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக் கின்றார்.

இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.

Monday, February 2, 2015

புலிகளுடன் தொடர்புடைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட மாட்டாது: அரசாங்கம்!

Monday, February 02, 2015       புலிகளுடன் தொடர்புடைய சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட மாட்டாது என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணையச் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதித்திருந்தது.

புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீக்க எவ்வித திட்டங்களும் கிடையாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

க்ளோபல் தமிழ் போராம், பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

அமைப்புக்களின் தடைகளை நீக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.