Tuesday, February 10, 2015

92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்!!

Tuesday, February 10, 2015
92 இலங்கைப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 92 பேருக்கு சொந்தமான 129 சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் முதனிலை வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சீ வங்கியிடமிருந்து இந்த இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 92 பேரில் ஒரு தனிப்பட்ட இலங்கையர் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்துள்ள நபர்களின் நாடுகளைக் கொண்ட வரிசையில் இலங்கை 112 இடத்தை வகிக்கின்றது.

இந்த 92 இலங்கையர்களில் 88 பேர் 1974ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கணக்குகளை ஆரம்பித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்த 19000 பேர் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்யவில்லை என குறிப்பிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்வது சட்டவிரோதமானது இல்லை என்ற போதிலும், பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டு வைப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிச் சட்டங்களின் அடிப்படையில் கணக்கு பேணுவோரின் விபரங்களை இலகுவில் நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment