Sunday, January 25, 2015

22ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

Sunday, January 25, 2015
வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படுகாயமடைந்த இந்தச் சிறுமி கொழும்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிட்சைகள் பலன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
முகம்மட் நௌசாத் மற்றும் பாத்திமா சபீகா ஆகியோரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்; பவானி சிங் திடீர் ராஜினாமா!!

Sunday, January 25, 2015
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.
 
அதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.
 
இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.
''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்
 
ஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு
 
ராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.
 
திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.
 
அப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
 
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு!

 Sunday, January 25, 2015
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்–1’ விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்தார்.
 
இந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், அவரை மத்திய அமைச்சர்கள் குழு வரவேற்றது.
 
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
 
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஒபாமா வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம்,புலி கைதிகளின் விடுதலை குறித்து வடக்கு முதலமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு!

Sunday, January 25, 2015
நாட்டில் மீண்டும் புலிகளின்  தீவிரவாதததை உருவாக்க பல கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றது!
 
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனைச் சந்தித்து வலி. வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
 
அமைச்சர் சுவாமிநாதனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், முதலமைச்சருடன் வட மாகாண சபையின் 3 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் காணிகளை விடுவித்து அதில் மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்வது பற்றி இந்த சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
வலி. வடக்கில் சுமார் 6,500 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினரால் கையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் தேசிய பாதுகாப்புக்கும் படையினரின் தேவைகளுக்கும் அவசியமற்ற ஏனைய அனைத்து காணிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்குள் இவ்விடயத்தையும் உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அத்துடன், வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் தற்போது கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் காணிகளில் சிறிய பரப்பொன்றே அவர்களதும் அதேபோல், தேசிய பாதுகாப்பின் நிமித்தமானதுமான தேவைகளுக்கு அவசியமாக இருக்கும் என்ற வகையில் 5 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க முடியும் என்றும் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் சுவாமிநாதன் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, சிறைச்சாலைகளில் இருக்கும்  புலி அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
 
அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாதவர்களில் பலரும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கும் மக்களுக்கும் இருப்பதால், நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பில் சிறைச்சாலை சென்று இந்த கைதிகள் பற்றி ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கான அதிகாரங்கள் நீதிபதிகளுக்கு இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள நாளை பெல்ஜியம் பயணம்!

Sunday, January 25, 2015
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஆணைக்குழுவை சந்திப்பதற்காக நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தின், ரஸல்ஸ் நகருக்குச் செல்லவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இலங்கையிலிருந்து மீன்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என ஐரோப்பா கடந்த அரசாங்க காலத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
 
ஐரோப்பிய ஆணைக்குழு விதித்துள்ள இந்த தடையுத்தரவுக்கு எதிரான காரணங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வரையில், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்காவது இந்த தடையுத்தரவை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அமைச்சரின் இவ்விஜயத்துக்கான நோக்கமாகும் எனவும் அரசாங்கம் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடும் கூட்டணிக் கட்சிகள்!

Sunday, January 25, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப்
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டிசில்வாவுக்கு கூட்டணிக் கட்சிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டன.
 
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இருக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர். சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாலும் அவருக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்த மக்கள் ஆணையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த வாக்குகளை நானோ அல்லது விமல் வீரவன்ஸவோ, நிமால் சிறிபால டிசில்வாவோ அல்லது வேறு யாருமே பெற முடியாது.
 
வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரி வழிகாட்டலின் கீழ் போட்டியிடவுள்ளது. எனினும் முன்னணியின் பெரும்பாலான கட்சிகள் அந்த முன்னணியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் போட்டியிடவே விரும்புகிறோம். கட்சி பற்றிய முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அவரின் தலைமையின் கீழேயே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்" என்றார்.
 
புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
 
சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்