Sunday, January 25, 2015

மீள்குடியேற்றம்,புலி கைதிகளின் விடுதலை குறித்து வடக்கு முதலமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு!

Sunday, January 25, 2015
நாட்டில் மீண்டும் புலிகளின்  தீவிரவாதததை உருவாக்க பல கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றது!
 
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனைச் சந்தித்து வலி. வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
 
அமைச்சர் சுவாமிநாதனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், முதலமைச்சருடன் வட மாகாண சபையின் 3 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் காணிகளை விடுவித்து அதில் மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்வது பற்றி இந்த சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
வலி. வடக்கில் சுமார் 6,500 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினரால் கையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் தேசிய பாதுகாப்புக்கும் படையினரின் தேவைகளுக்கும் அவசியமற்ற ஏனைய அனைத்து காணிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்குள் இவ்விடயத்தையும் உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அத்துடன், வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் தற்போது கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் காணிகளில் சிறிய பரப்பொன்றே அவர்களதும் அதேபோல், தேசிய பாதுகாப்பின் நிமித்தமானதுமான தேவைகளுக்கு அவசியமாக இருக்கும் என்ற வகையில் 5 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க முடியும் என்றும் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் சுவாமிநாதன் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, சிறைச்சாலைகளில் இருக்கும்  புலி அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
 
அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாதவர்களில் பலரும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கும் மக்களுக்கும் இருப்பதால், நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பில் சிறைச்சாலை சென்று இந்த கைதிகள் பற்றி ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கான அதிகாரங்கள் நீதிபதிகளுக்கு இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment