Tuesday, August 30, 2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது!

Tuesday, August 30, 2011
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 72-ன்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து குடியரசு தலைவர் நிராகரித்த சூழ்நிலை குறித்தும் இந்த விஷயத்தில் தமிழக முதல்- அமைச்சரான எனக்கு உள்ள அதிகாரம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் விளக்கமாக அறிவித்தேன்.

3 பேரின் கருணை மனுவை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு இதில் நடவடிக்கை எடுகக முடியாது என்றும் கூறி இருந்தேன். இந்த விஷயத்தில் மீண்டும் குடியரசு தலைவர்தான் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினேன்.

3 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையால் தமிழக மக்கள் இடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரும் வருத்தம் அடைந்தது பற்றியும் எனது கவனத்துக்கு வந்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

3 தூக்கு தண்டனை கைதிகளில் வேறு சிறைக்கு மாற்றப்படுபவர் யார்?.

Tuesday, August 30, 2011
வேலூர்: தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள ராஜீவ் கொலையாளிகளில் ஒருவர் வேறு சிறைக்கு மாற்றப்படலாம். அவர் யார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கருணை மனு 11 ஆண்டுகளுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 9ம்தேதி அதிகாலை 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் உள்ள தூக்கு மேடை சரியாக இயங்குகிறதா என்று சோதனை செய்துள்ளனர். தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணிலா கயிறும் தயாராக உள்ளது. வேலூர் சிறையில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு மட்டுமே தண்டனை நிறைவேற்ற முடியும். இதனால், 3வது நபரை சென்னை புழல் அல்லது சேலம் சிறையில் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புழல் அல்லது சேலம் சிறையில் ஒரு கைதியை தூக்கிலிட தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாந்தன் அல்லது பேரறிவாளன் ஆகியோரில் ஒருவரை சேலம் அல்லது புழல் சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. பேரறிவாளன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம், எந்த பரபரப்பிலும் தொடர்பில்லாத சாந்தனை மாற்றினால் பிரச்னை எதுவும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஹை ரிஸ்க் கைதிகளான இவர்களை வேறு சிறைக்கு மாற்றுவதில் பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறது. இதை எப்படி கையாள்வது என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். Ôராஜிவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதில் எந்த மாதிரியான உத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். அதன்பிறகே ஒரு கைதியை வேறு சிறைக்கு மாற்றுவது என்பது முடிவாகும்Õ என்று சிறைத்துறை உயரதிகாரிகள் கூறினர்.

முருகனை சந்திக்க நளினி வருகை?

வேலூர் சிறையில் உள்ள முருகனை, புழல் சிறையில் உள்ள அவரது மனைவி நளினி சந்திக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியது. சென்னை புழல் சிறையில் இருந்து அவர் புறப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. இதை சிறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை போலீசார் உறுதிபடுத்தவில்லை.

நீதிமன்றத்தை புறக்கணித்து வரும், 6 புலிச் சந்தேக நபர்களை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, August 30, 2011
இலங்கையின் யுத்தம் நடைபெற்ற போது, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் அமைப்புக்கு 100 லட்சம் ரூபா நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமால், நீதிமன்றத்தை புறக்கணித்து வரும், 6 சந்தேக நபர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை கைதுசெய்தவற்கான பிடியாணையையும் நீதிபதி நேற்று பிறப்பித்தார். நீதிமன்றத்தை புறக்கணித்து வரும் சந்தேக நபர்கள், தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் இணைந்து, புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் புலிகள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனையை நிறுத்த மனு ஐகோர்ட் இன்று விசாரணை!

Tuesday, August 30, 2011
சென்னை : ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு நகல், கடந்த 26&ம் தேதி வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பியிடம் வழங்கப்பட்டது. வரும் 9&ம் தேதி 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை அதிகாரி அறிவித்தார். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஐகோர்ட்டில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து தமிழக கவர்னருக்கு கருணை மனு அனுப்பினோம். இதை கவர்னர் நிராகரித்தார்.

பின் கடந்த 2000ம் ஆண்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினோம். இந்த மனுவை கடந்த 25ம் தேதி ஜனாதிபதி நிராகரித்தார். கடந்த 11 ஆண்டுகளாக கருணை மனுவை ஜனாதிபதி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. இவ்வளவு காலதாமதமானது சட்டவிரோதமானது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் தனிமை சிறையில் இருந்துள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளாக ஜனாதிபதிக்கு நினைவூட்டு கடிதம் எழுதியும் எங்கள் கருணை மனு மீது ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டோம். அதன்பிறகு தூக்கு தண்டனை விதிப்பது இரட்டை தண்டனை வழங்குவது போன்றதாகும். எங்களுக்கும் இந்த கொலைக்கும் நேரடி தொடர்பு இல்லை.

தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் இருந்து தடா நீதிமன்றத்தில் விசாரணை முழுவதும் நடத்தப்படவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். எனவே செப்டம்பர் 9&ம் தேதி எங்களை தூக்கில் போட வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி பால்வசந்தகுமாரிடம், வக்கீல் சந்திரசேகர் உள்பட பலர் கோரிக்கை வைத்தனர். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 3 பேர் சார்பாக மூத்த வக்கீல் ராம்ஜெத்மாலனி ஆஜராகி வாதாடுகிறார்.

2 நீதிபதிகள் விசாரணை

வழக்கை இன்று, நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் கொண்ட பெஞ்ச் விசாரிக்க தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனை வழங்கப்படக் கூடாது எனக் கோருவோர் புலிகளுக்கு ஆதரவானவர்கள்-முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம!

Tuesday, August 30, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது எனக் கோரும் தரப்பினர் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசரணை நடத்தப்பட வேண்டுமென கோரும் அதேவேளை, மறுபுறத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்யுமாறு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளும் சில தரப்பினரும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையின் மூலம் குறித்த சக்திகளின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாருஸ்மன் அறிக்கை மற்றும் செனல்4 ஊடகம் ஆகியவற்றின் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தத் தரப்பினர் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என்பதனை எவரும் மறந்து விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் குறுக்கிடக் கூடாது-சுப்ரமணிய சுவாமி!

Tuesday, August 30, 2011
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் குறுக்கிடக் கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார் என்று சுவாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அவர் கூறினார்.

செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது என சுவாமி குறிப்பிட்டார்.

மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும் என்றும் சுவாமி தெரிவித்தார்.