Wednesday, June 5, 2019

இலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம்:ஞானாசார தேரர்!

 நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களை ஓரம்கட்ட முற்பட்டால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் எச்சரித்தி ருக்கின்றார்.முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் நாட்டில் முஸ்லீம் – சிங்கள இனக் கலவரம் வெடிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வழங்கியது முஸ்லிம்களே. அவர்களே எமக்கு உதவினார்கள். எனினும் இன்று நடக்கும்

விடயங்களை அவதானிக்கையில் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம்களும் பிரிவினைவாதிகளாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இது எவ்வளவு பெரிய பிழை. இந்தப் பிரச்சினையை வேறு திசைக்கு திருப்புகின்றனர். மங்கள சமரவீர இது பௌத்த நாடல்ல எனக் கூறினார். நாங்கள் அது தொடர்பில் பேசினோம். அதன் பின்னர் வேறு பிரச்சினையை கையிலெடுத்தோம். அதன் பின்னர் தெரிவுக்குழுவை திட்டித்தீர்த்தோம். அதன் பின்னர் அந்த மூன்று பேரை முன்னிறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரத்தை ஆரம்பித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்து முஸ்லிம் அமைச்சர்களை விலகிச்செல்லுமாறு கேட்டிருந்தால் அது நியாயமான விடயமாக அமைந்திருக்கும். அவர்கள் மூவருமா பிரச்சினை. நான் உண்ணாவிரதத்தை தவறாக சித்தரிக்கவில்லை. யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு சென்றால் எதிர்காலத்தில் சிங்கள - முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
 
இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ள அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோரது பதவிகளை பறிக்குமாறு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் பாரிய தவறை இழைத்துவிட்டதாகவும் ஞானாசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை உருவாக்கிய தரப்புக்களை ரத்ன தேரரின் போராட்டம் தப்பிக்க இடமளித்துவிட்டதாகவும் ஞானாசார தேரர் கடும் ஆத்திரம் வெளியிட்டிருக்கின்றார்.
 
ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்துள்ளது. சஹ்ரான் உள்ளிட் டவர்களின் நோக்கமும் அதுவாகவே இருந்தது. ரத்ன தேரர் மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பிலேயே பேசினார். எனினும் உலமா சபை தொடர்பிலோ, முஸ்லிம் கவுன்சில் தொடர்பிலோ பேசவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நோக்கத்தை உருவாக்கியவர்கள் தொடர்பில் அவர் பேச மறுத்துவிட்டார். அந்த முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போலத்தான் சிங்கள அரசியல்வாதிகளும். சிங்கள அரசியல்வாதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் இல்லையா?
 
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இல்லையா? இவர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளை யாக்குவது யார்? முஸ்லிம் வர்த்தகர்களே அவற்றை மேற்கொள்கின்றனர். ஆகவே எமது அரசியல்வாதிளுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும்.வஹாப் வாதத்துக்குள் சென்றுவிட வேண்டாமென நாம் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொள்கின்றோம். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து இன்று வீரர்களாக மாறியுள்ளனர். இந்தப் பிரச்சினையை வைத்து சிங்கள மக்கள் மத்தியிலும் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். வீரர்கள் உருவாகி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அனைவரும் வெளிப்படையாக பேசி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். நானும் இந்தப் பிரச்சினையை வெளிப்படையாக நோக்க வேண்டும்'.
 
நாட்டில் இஸ்லாமிய பிரிவினைவாதம் உருவெடுத்துள்ளது. அதனை நாம் ஏப்ரல் 21ஆம் திகதி கண்கூடாக பார்த்தோம். நேற்றைய தினம் அதில் வித்தியாசத்தை காணமுடிந்தது. முஸ்லிம் தலைவர்களை இலக்கு வைத்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நினைக்கின்றார்கள் இவர்களை பதவி நீக்கியதன் பின்னர் இந்த நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென. அவர்களைப் பொறுத்தவரை பிரச்சினை தீர்ந்துவிட்டது. இவ்வாறான விடயங்களால் உண்மையான பிரச்சினை இன்று மூடி மறைக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி அழிவுக்கு பின்னர் நாம் சமாதானத்துக்காகவே செயற்பட வேண்டும். நாங்கள் அனைத்து தரப்புக்கும் அழைப்பு விடுக்கின்றோம். நாட்டின் தமிழ்,சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கைவிட்டு தேசிய சமாதானத்துக்காக முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கொள்கைகளை கைவிட்டு இதற்காக முன்வரவேண்டும். அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையை வெளிப்படையாக பேசும்வரை வஹாப்வாத அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது'
 
இலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை பௌத்த பிக்குகளிடம் ஒப்படைத்துவிட்டு அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஞானாசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.இந்த பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்கான முழுப்பொறுப்பும் பௌத்த பிக்குகளுக்கே ஒப்படைக்கப் பட்டுள்ளது. இது மதத் தீவிரவாதம். இந்த போராட்டத்தை கைவிட பௌத்த பிக்குகளுக்கு முடியாது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது போன்ற தீர்வினைத் தரமுடியாது. அவர்களுக்கு ஒரு அரசியல் நோக்க மிருந்தது. எனினும் இந்த தீவிரவாதம் வேறுதிசையில் செல்கின்றது. இது அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பழிவாங்கும் செயற்பாடு. சஹ்ரான் நடத்திய தாக்குதலின் பின்னணி கண்டறியப்பட்டு அதனை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். ஆகவே இந்த தீவிரவாதத்தை இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தை மகா சங்கத்தினர் கையில் எடுத்துள்ளனர் என்பதை அரசியல்வாதிகளுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். சங்க சபைகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அரசியல்வாதிகள் இதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்கின்றோம். உங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்'என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment