Wednesday, June 5, 2019

'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், 'டாப் 10' பயங்கரவாதிகளின் பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து உள்ளது.
மேலும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, கவர்னர் சத்யபால் மாலிக்குடன், உள்துறை அமைச்சர், அமித் ஷா பேச்சு நடத்தினார். பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்தியஉள்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றார். துறை ரீதியிலான பணிகளை உடனடியாக துவங்கிய அவர், ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசினார்.மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, அமித் ஷாவிடம் கவர்னர் விளக்கினர்.மேலும், வரும் ஜூலை 1 முதல் துவங்க இருக்கும் அமர்நாத் யாத்திரைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், 'டாப் 10' பயங்கரவாதிகளின் பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து உள்ளது. இதில், ஹிஜ்புல் முஜாகிதீன் தலைவன், ரியாஸ் நய்கூ மற்றும் அஷ்ரப் மவுல்வி, லஷ்கர் அமைப்பை சேர்ந்த வாஸிம் அகமது உட்பட முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் பெயர்களை, ராணுவத்தின் உதவியுடன், மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.
 
காஷ்மீர் பிரிவினைவாதிகள் டில்லியில் கைது

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி உதவி அளிப்பதாக, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் மற்றும் சயீத் சலாலுதீன் உட்பட, 10 காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது, தேசிய புலனாய்வு நிறுவனம், கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, காஷ்மீர் பிரிவினைவாதிகள் மசரத் ஆலம், ஆசியா அந்த்ரபி மற்றும் ஷபீர் ஷா ஆகியோரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் டில்லியில் கைது செய்தனர். இவர்களை, பத்து நாட்கள், புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரிக்க, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment