குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்த ரிஷாட் பதியுதீனுடன் தற்போதைய ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகித்த பதவிகளில் இருந்து கூட்டாக விலகிக்கொண்ட செயல் ஒரு கண்துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம்சாட்டியிருக்கின்றது.கொழும்பில் நேற்று ஒன்றிணைந்த எதிரணியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடயத்தில் மாத்திரமே அனைவரிடமும் முரண்பாடுகள் காணப்பட்டன. இது உயிர்த்த ஞாயிறு தாக்குல்களை
அடுத்து உருவான ஒன்றல்ல. நீண்ட காலமாகவே காணப்பட்டது.நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எம்மாலும் பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பாரிய குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குள் அடிப்படைவாதத்துக்கு ஆதரவு அளித்தமை மற்றும் அபரிதமான முறையில் சொத்துகள் சேர்த்தமை உள்ளிட்ட விடயங்களை மதத்தலைவர்கள் கதைப்பதற்கு ஆரம்பித்தனர்.
அவர் மாத்திரமின்றி எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளினதும் சொத்துகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து வெளியிட்டிருந்தார். எதிர்கட்சி என்ற ரீதியில் அவரது கருத்துக்கு நாங்களும் இணக்கம் வெளியிட்டிருந்தோம். நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களின் சொத்துகளில் அசாதாரண வளர்ச்சி காணப்பட்டதால் அரசியல் பேதமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கலுக்காகவே அரச இயந்திரத்தை பயன்படுத்தியதே தவிர நீதியை நிலைநாட்டுவதற்கு அதனை பயன்படுத்தவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயவின் தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்த விடயம் தொடர்பில் விசேட மேல் நீதிமன்றம் அமைத்து விசாரிக்கும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணமான மத்திய வங்கி பிணை முறி மோசடியை அவ்வாறு விசாரிக்கவில்லை'.
த
ற்போதைய அரசாங்கத்தில் வகித்த பதவிகளில் இருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிக்கொண்டுள்ளதாக அறிவித்தாலும் இதுவரை அவர்கள் தமது அமைச்சுகளுக்கு நியமித்திருந்த அதிகாரிகளோ அமைச்சின் வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட வசதிகளையோ மீள கையளிக்கவில்லை என்றும் பந்துல குணவர்தன குற்றம்சாட்டுகின்றார்.
அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மாத்திரமே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஹக்கீம் உள்ளிட்ட ஏனைய எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. ஒரு அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் அனைவரும் ஒரே தடவையில் தமது பதவிகளில் இருந்து விலகி கண்துடைப்பு நாடகமொன்றை அரங்கேற்றி பதவிகளில் இருந்து விலகிக்கொண்டமை தொடர்பில் நாங்கள் ஆழமாக யோசிக்கின்றோம். கண்துடைப்பு ராஜினாமா என்று கூறுவதற்கு காரணம் இவர்கள் பதவிகளில் இருந்து விலகியதாக கூறினாலும் அவர்களது நிர்வாகக்குழு பதவி விலகவில்லை. அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. அவர்கள் நியமித்த அதிகாரிகள் பதவி விலகியதாக தகவல்கள் இல்லை. கண்காட்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்'.
இதேவேளை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பாதிப்பு ஏற்படாது என வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த பந்துல குணவர்தன தமிழ் மக்களை தோற்கடிக்கும் நோக்கில் யுத்தத்தில் மஹிந்த ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அதிகளவிலான முஸ்லிம் மக்களும் அவர்களின் பிரதிநிதிகள் என பல்வேறு குழுக்கள் வருகைதந்து தினந்தோறும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடுகின்றனர்.
முஸ்லிம்மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் தெளிவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அடிப்படைவாதிகளை தவிர ஏனைய எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு சிறு துரும்பளவேனும் பாதிப்பு ஏற்படுத்த மஹிந்த அரசாங்கத்திடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. இதனை தெளிவாக கூறிவிட்டார். இதனை நடைமுறையில் செய்துகாட்டியவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவர் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையே. பிரபாகரனின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கே செயற்பட்டதுடன் தமிழ் மக்களை தோற்கடிக்கும் நோக்கம் சிறிதளவேனும் அவருக்கு இருக்கவில்லை'தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment