Tuesday, September 15, 2015

இலங்கை போர் குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை நாளை தாக்கல்: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் அறிவிப்பு!

Tuesday, September 15, 2015
ஜெனீவா:இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் புலிகள் , புலிகளின் ஆதரவாளர்கள்  கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக ஒரு விசாரணை குழுவை நியமித்தது. ஆனால் அப்போதைய ராஜபக்சே அரசு இதனை ஏற்க மறுத்து விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கவில்லை.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் புதிய அதிபர் சிறிசேனா விசாரணை குழுவை ஏற்றுக்கொண்டார். சிறிசேனாவின் வேண்டுகோளை ஏற்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தனது விசாரணை அறிக்கையை இலங்கை அரசிடம் தாக்கல் செய்து, இதன் மீது பதில் அளிக்க 5 நாட்கள் அவகாசமும் அரசுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 30-வது கூட்டத்தொடர் நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை குழுவின் அதிகாரி சையத் ராத் அல் உசைன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

6 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டு போரின் கடைசி மாதங்களில் தீவிர மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பையும் நாங்கள் எதிர்கொண்டோம். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை குழுவின் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை 16-ந் தேதி (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் முடிவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கும். இந்த அறிக்கையுடன் எனது பரிந்துரையும் இடம்பெற்று இருக்கும்.

இலங்கை உரிமை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதிபர் சிறிசேனா எடுக்கும் திட்டங்களை வரவேற்கிறேன். தீர்க்கமான முறையில் கடந்த தோல்விகளை தாண்டி நகர்கிறது. ஆழமான அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவருவதற்கு, மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா பேசும்போது கூறியதாவது:-

ஒற்றுமை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே உண்மையை அறிதல், நீதி, சேதத்துக்கு ஈடு செய்தல், திரும்பவும் நிகழாமல் தடுத்தல் போன்ற பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று இலங்கை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் பிறநாடுகளின் நிர்வாகத்தின் உதவியுடன் இலங்கை அரசு சொந்தமாக ஒரு உண்மையான கமிஷனை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

அந்த உண்மை கமிஷன் அளிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்த ஒரு அலுவலகத்தையும் அமைக்க இலங்கை அரசு விரும்புகிறது. இதுபோன்ற நிலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான சிறந்த வழி அரசியல் தீர்வு தான். இது தமிழர்களின் குறைகளை போக்க உதவும்.

இவ்வாறு சமரவீரா கூறினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment