Tuesday, September 15, 2015

தினமும் 16ஆயிரம் குழந்தைகள் மரணம்: உலக சுகாதார நிறுவனம்!!

Tuesday, September 15, 2015
உலகில் தினமும் 5 வயது நிரம்பாத, 16 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
ஐ.நா., அமைப்பான உலக சுகாதரா நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து, உலக குழந்தைகளின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரியவருவதாவது: புள்ளி விவரங்களின் அடிப்படையில், 1990ம் ஆண்டில் 5வயது நிரம்பாத, 1.27 கோடி குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதுவே 2015ம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு 60லட்சமாக குறைந்துள்ளது. அதாவது 1990ம் ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீத அளவிற்கு குழந்தைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் நாள்தோறும் 5வயது நிரம்பாத, 16ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இதில் பாதிப்பேர் ஊட்டச்சத்து குறைவினால் பலியாகும் அதிர்ச்சி தகவலும் தெரியவருகிறது.
 
அதுவே 28 நாட்கள் நிரம்பாத பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 45 சதவீதமாக உள்ளது. கடந்த 2000 ஆண்டிலிருந்து, 4.8 கோடி குழந்தைகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உயிர் பிழைத்துள்ளன. பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், மலேரியா, நிமோனியா, வயிற்றுப்போக்கு ஆகியவை பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற மரணங்கள், ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் நடக்கின்றன. 10 குழந்தைகள் உயிரிழந்தால், அதில் 5 குழந்தைகள் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்ததாகவும், 3 குழந்தைகள் தெற்கு ஆசியாவை சேர்ந்ததாகவும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
 
இம்மாத(செப்டம்பர்) இறுதியில் நடைபெறும் ஐ.நா., மாநாட்டில், அடுத்த 15 ஆண்டுகளுக்கான இலக்குகளும், செயல்திட்டங்களும் தாக்கல் செய்யப்படஉள்ளன. அதில் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 3.8 கோடி குழந்தைகளின் உயிர்களை காக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment