Sunday, September 13, 2015

மத்திய பிரதேச வெடி விபத்தில் 89 பேர் பலி: முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆய்வு!

Sunday, September 13, 2015
மத்திய பிரதேசத்தின் பெட்லவாட் நகரில் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆய்வு செய்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தின் பெட்லவாட் நகரில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி, தினக்கூலித் தொழிலாளர்கள் உள்பட அப்பாவி மக்கள் 89 பேர் பலியாகினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர்.
 
ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் பகுதியில் உள்ள ராஜேந்திர கசவா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியில், கிணறுகள் வெட்டும்போது பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
 
இதுதவிர, அந்தக் கட்டடத்தில் மேலும் 2 கடைகளும் இருந்தன. அதேபோல், அந்தக் கட்டடத்தின் அருகே பிரபல உணவு விடுதியும் இருந்தது.
 
இந்நிலையில், ராஜேந்திர கசவாவின் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்கள் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறின. இதில், அந்தக் கட்டடமும், அதன் அருகேயிருந்த உணவு விடுதியும் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அதேபோல், அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்களும், வீடுகளும், வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
 
வெடிகள் வெடித்து சிதறியபோது உணவு விடுதி அருகே தினக்கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். மேலும் சிலர், உணவு விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். இதனால் வெடி விபத்தில் 2 கட்டடங்களும் இடிந்து விழுந்தபோது, அதன் அருகே இருந்தவர்களும், உணவு விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களும் சிக்கிப் புதையுண்டனர்.
 
இதில், உடல் நசுங்கியும், வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்டும் 89 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
 
இந்த விபத்துக்கு முதலில் உணவு விடுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை வெடித்ததே விபத்துக்கு காரணம் எனதகவல் வெளியாகியது. ஆனால், அருகாமையில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று  விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளவுகான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அப்போது சம்பவம் நடந்த இடத்தில் சிவராஜ் சிங் செளவுகானுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடைபெற்றதால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
 
ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருள்களை, விபத்து நிகழ்ந்த கட்டடத்துக்குள் சேகரித்து வைத்திருந்த, ராஜேந்திர கசாவா என்பவர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ள அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று பெட்லவாட் நகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
முன்னதாக, வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment