Sunday, September 13, 2015

16 தமிழக மீனவர்கள் விடுதலை!

Sunday, September 13, 2015
இலங்கையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரனில் விக்கிரமசிங்கை, நாளை தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருவதால், நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து இலங்கைப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ மற்றும் உடல் நலக் காரணங்களுக்காக 16 பேரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார் ரனில்.
 
பிரதமரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாகும். தனது இந்தியப் பயமத்தின்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வரும் முக்கியப் பிரச்சினை குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நல்லெண்ண நடவடிக்கையாக 86 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை
 
செய்தது. ஆனால் மீண்டும் பல மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் அதே மார்ச் மாதம் 54 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இப்படிப் பிடிப்பதும், விடுவிப்பதுமாக விளையாட்டு காட்டி வருகிறது இலங்கை. இதற்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்காமல் இழுத்தடித்து வருகிறது இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment