Monday, August 17, 2015

பொதுத் தேர்தல் ஒரு பார்வை!

Sunday, August 17, 2015
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 15வது பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகின்றது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது.
 
பாராளுமன்றத்தின் 196 பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக இன்று நாடு முழுவதுமுள்ள ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கவுள்ளனர். 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படியே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
 
இம்முறை பொது தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் அரசியல் கட்சி சார்பில் 3,653 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 2,498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
 
நாடு முழுவதுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 12,314 வாக்கெடுப்பு நிலையங்களும் 1600 வாக்கு எண்ணும் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதில் 1288 நிலையங்களில் சாதாரண வாக்குச்சீட்டுக்களும் மிகுதி 312 நிலையங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களும் எண்ணப்படும்.
170 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 30,000 பேர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற அதேநேரம் சுமார் 70 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் எண்ணும் பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
இன்று நடத்தப்படும் பொதுத் தேர்தலின்படி பாராளுமன்றத்திற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்தே ஆகக் கூடிய எண்ணிக்கையான 19 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்தே ஆகக்குறைந்த எண்ணிக்கையான 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment