Wednesday, August 12, 2015

இறுதிக் கட்டப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் : இறுதி விசாரணை அறிக்கையை தேர்தல் முடிவடைந்ததும் ஜனாதிபதியிடம்!

Wednesday, August 12, 2015
இறுதிக் கட்டப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை தேர்தல் முடிவடைந்ததும் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. அத்துடன், காணாமல்போனோர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் சம்பந்தமான இடைக்கால அறிக்கையொன்றும் இதன்போது ஒப்படைக்கப்படவுள்ளது.
 
இந்த இரண்டு அறிக்கைகளும் அடுத்த வாரமளவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்று மேற்படி ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். அதேவேளை, காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை மட்டக்களப்பில் பொது அமர்வை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை தனது ஆட்சியின்போது மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்திருந்தார். காலப்போக்கில், போரின்போது சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மேற்படி ஆணைக்குழுவின் விடயப்பரப்பை மஹிந்த விஸ்தரித்தார் என்பதுடன், இக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு டெஸ்மன் டி சில்வா தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கமையவே இறுதிப்போரில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பிலும் பரணகம குழு விசாரணைகளை நடத்தியது. 55, 56, 57 ஆகிய படைப் பிரிவுகளுக்குத் தலைமைவகித்த இராணுவ அதிகாரிகளிடமும் அது வாக்குமூலங்களைப் பதிவுசெய்திருந்தது. இவ்வாறு பல வழிகளிலும் விசாரணைகள் நடத்தப்பட்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக தேர்தல் முடிந்ததும் இது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். காணாமல்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருந்தாலும், இதற்கு முன்னரும் அது தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு கையளிக்கப்படும் அறிக்கையை செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அரசு சமர்ப்பிக்கவுள்ளது.

No comments:

Post a Comment