Wednesday, August 12, 2015

புலிகளுக்கு பணம் கொடுத்திருந்தால் யுத்தத்தில் பிரபாகரனும் அவரது மனைவி பிள்ளைகளும் இறந்திருக்க மாட்டார்கள்: உதய கம்மன்பில!

Wednesday, August 12, 2015
புலிகளுக்கு பணம் கொடுத்திருந்தால் யுத்தத்தில் பிரபாகரனும் அவரது மனைவி பிள்ளைகளும் இறந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து யுத்தம் செய்யவேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க மஹிந்தவுக்கு விடுத்துள்ள சவாலை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தைரியம் இருந்தால் சம்பிக்க என்னுடன் விவாதத்துக்கு வர வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
 
புலிகள் பயங்கரவாத இயக்கத்துக்கு பணம் கொடுத்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலப்படுத்தும் வேலையினை மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டார் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆனால் சம்பிக்க ரணவக்க பல விடயங்களை மறந்துவிட்டார் என்பது தெளிவாக விளங்குகின்றது. ஜாதிக ஹெல உறுமைய கட்சியில் நாம் அனைவரும் ஒன்றாக செயற்பட்ட சந்தர்பத்தில் ரணிலின் ஆட்சிக் காலத்திலும், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் விடுதலை புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் எனக் கூறி ஊர்வலம் சென்றோம். ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம். அந்த சந்தர்ப்பகளில் அரசாங்கமே எம்மீது கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தி யுத்தத்தை நடத்த முடியாது எனக் கூறினார்.
 
அதேபோல் மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் நாம் இவ்வாறு புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்தை முன்னெடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எம்மீது தாக்குதலை நடத்தது மாறாக விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்தார். அந்த போராட்டமே இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஜாதிக ஹெல உறுமைய முக்கிய பங்கினை வகித்தது உண்மையே. ஆனால் யுத்த வெற்றியை முழுமையாக உரிமை கோர சம்பிகவுக்கு தகுதி இல்லை.
 
அதேபோல் 2002 ஆம் ஆண்டு உருவாகிய ரணிலின் ஆட்சியின் கீழேயே இந்த நாட்டில் விடுதலைப் புளிகளுடனான சமாதான ஒப்பந்தம் முன்னெடுக்கப் பட்டது. அதை செய்தது ரணில் விக்கிரம சிங்கவும் பிரபாகரனுமே தவிர மஹிந்த ராஜபக் ஷ அல்ல. அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ புலிகளுக்கு பணம் கொடுத்திருந்தால் அவர்களுடன் யுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த யுத்தத்தில் பிரபாகரன் மட்டுமல்லாது அவரது மனைவி பிள்ளைகள் அனைவரும் உயிர் இழந்துவிட்டனர். பிரபாகரனை பலப்படுத்த நினைத்தால் அனைவரையும் தாக்கவேண்டிய அவசிய இல்லை. ஆனால் அப்போது மஹிந்தவின் அரசாங்கத்தில் இருக்கும் போது இவற்றையெல்லாம் நினைவில் வைத்திருந்த சம்பிக்க இப்போது ரணிலின் கூட்டுக்குள் சென்றவுடன் அனைத்தையும் மறந்துவிட்டார்.
 
மேலும் மஹிந்தவை விவாதத்துக்கு அழைப்பதாயின் அல்லது மஹிந்தவுடன் விவாதிக்க வேண்டுமாயின் அதை ரணில் தெரிவிக்க வேண்டும். அவரது கையாட்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்லை. நான் சப்பிகவுக்கு ஒரு சாவால் விடுக்கின்றேன். அவர் கூறிய அதே புலிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், புலிகளிக்கு யார் பணம் கொடுத்தது என்பது தொடர்பில் சப்பிக்கவுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். சப்பிகவுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment