Sunday, August 16, 2015

மதவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி!

Sunday, August 16, 2015:
புதுடில்லி: ''மதவாதம், ஜாதிவாதம் போன்றவை, கொடிய விஷம் போன்றவை. மக்களை பிரித்தாலும் சதிக்கு, இந்தியாவில் இடம் இல்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, தன், சுதந்திர தின விழா உரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் சுதந்திர தின விழா, நாடு முழுவதும், நேற்று கோலாகலமாக நடந்தது. டில்லியில், நேற்று காலை, மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி, மலர் அஞ்சலி செலுத்தினார். பின், செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அவரின் உரை:வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான், நம்முடைய சிறப்பம்சம். நம்முடைய இந்த சிறப்பை தான், உலகமே பாராட்டுகிறது. ஒற்றுமை சீர்குலைந்து விட்டால், மக்களின் கனவுகளும் சீர்குலைந்து விடும். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. மதவாதம், ஜாதி வெறி ஆகியவை, நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் விஷம் போன்றவை; அதற்கு ஒருபோதும் இடம் அளிக்க முடியாது. வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் மூலம், மத, ஜாதிவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும். எந்த சூழ்நிலையிலும், இந்தியாவில் ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுத்த விடமாட்டோம். கொள்கைகளை யார் வேண்டுமானாலும் வகுக்கலாம்; ஒருசிலர் மட்டும் தான், அவற்றை செயல்படுத்த முடியும்.

பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களாகி விட்டன. இப்போது, பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும் இந்த தேசியக் கொடியை சாட்சியாக வைத்து கூறுகிறேன்; இந்த, 15 மாதங்களில் நாட்டில், ஒரு சிறிய ஊழல் கூட நடக்கவில்லை. ஊழலை மேல் மட்டத்தில் இருந்து, கீழ் மட்டம் வரை ஒழிப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. மத்திய அரசால் தீட்டப்படும் அனைத்து திட்டங்களும், ஏழைகளும், விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே செயல்படுத்தப்படுகின்றன. வங்கிகளின் கதவுகள் ஏழைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. 'ஜன்தன்' திட்டம் மூலம், 19 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில், 20 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு சுதந்திர தின உரையின்போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
'காஸ்' மானியம்:
 
சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தில் முறைகேடு நடப்பது தெரியவந்ததால், மானியத்தை நேரடியாக, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினோம்.
துவக்கத்தில், பலரும் இதை விமர்சித்தனர். ஆனால், இந்த திட்டத்தின் மூலம், தற்போது, 15 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக, 20 லட்சம் பேர், தாங்கள் பெற்ற மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். 15 கோடி வாடிக்கையாளர்களில், 13 கோடி பேர், நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.

கறுப்பு பணம்:
 
வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு வரும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கறுப்பு பணத்தை மீட்பதற்காக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு சொந்தமான, 6,500 கோடி ரூபாய் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. கறுப்பு பண முதலைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
விவசாயம்:
 
விவசாயம் தான், நம் நாட்டின் முதுகெலும்பு. விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு, சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, விவசாய அமைச்சகம், இனி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என்ற பெயரில் செயல்படும்.

வேலைவாய்ப்பு:
 
நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக, 'ஸ்டார்ட் அப்; ஸ்டாண்ட் அப் இந்தியா' என்ற புதிய பிரசாரம் துவக்கப்படுகிறது. நாட்டின் இளம் தலைமுறையினரை தொழில் முனைவோராக்குவது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகியவையே இந்த பிரசாரத்தின் நோக்கம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வங்கி கிளையும், தலா, ஒரு தலித் அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தோர் அல்லது பெண்களை, தொழில் முனைவோராக்குவதற்கு உதவ வேண்டும்.
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் தொழில் நிறுவனங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளின்போது, பின்பற்றப்படும் நேர்முகத் தேர்வு நடைமுறையில் தான், ஊழல் மலிந்துள்ளது. எனவே, நேர்முகத் தேர்வு நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தகுதி அடிப்படையில் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரே ரேங்க் ஒரே பென்ஷன்:
 
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், 'ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்' என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை, இறுதி கட்டத்தில் உள்ளது. இதில், ஆக்கப்பூர்வமான உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

விமர்சனம்:
 
ஒரு சிலர், தினம்தோறும் தேவையற்ற வதந்தியை பரப்புவதையே நோக்கமாக வைத்து செயல்படுகின்றனர். வதந்தியை பரப்பாவிட்டால், இவர்களுக்கு துாக்கமே வராது. இவர்களால் எந்த பயனும் ஏற்பட போவது இல்லை.
துாய்மை இந்தியா:
 
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, 'துாய்மை இந்தியா' திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான, 'டீம் இந்தியா'வில், திரைப்பட நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என, 1.25 கோடி பேர் செயல்படுகின்றனர். குழந்தைகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக பிரசாரம் செய்யும் மிகச் சிறந்த துாதுவர்களாக உள்ளனர்.
வரும், 2019க்குள், 'துாய்மையான இந்தியா'வை உருவாக்கி, தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, அர்ப்பணிப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.

'மாரத்தான்' உரை:
 
* பிரதமர் நரேந்திர மோடி, காலை, 7:23க்கு, செங்கோட்டைக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவர், அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.
*வட மாநிலங்களில் விவசாயிகள் அணிவது போன்ற தலைப்பாகை அணிந்திருந்த பிரதமர், ஜிப்பா, குர்தா மற்றும் மேல் கோட் அணிந்திருந்தார்.
* இதையடுத்து, ராணுவ வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவர், 7:39க்கு, தேசிய கொடியை ஏற்றினார்; அப்போது, 21 குண்டுகள் முழங்கின.
* பிரதமர் பேசுவதற்காக, குண்டு துளைக்காத கூண்டு எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதமரின் நேற்றைய சுதந்திர தின உரை, மிக நீண்டதாக இருந்தது. 85 நிமிடங்கள், அவர் உரையாற்றினார்.
* வழக்கமாக, பிரதமர்களின் சுதந்திர தின உரையில், பயங்கரவாதத்துக்கு எதிரான அம்சங்கம் இடம்பெறும். ஆனால், நேற்று, பிரதமர் மோடி, இதுபோன்ற விஷயங்களை பேசி, நேரத்தை வீணடிக்காமல், நாட்டின் முன்னேற்றம் பற்றிய திட்டங்களை மட்டுமே முன் வைத்து பேசினார்.
*இந்த விழாவில், 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 22 ஆயிரம் பேருக்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது; இதில், 8,000 பேர், வி.வி.ஐ.பி.,க்கள்.
*பிரதமர் முக்கியமான விஷயங்களை குறிப்பிடும்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். பிரதமர் உரையாற்றி முடிந்ததும், மூவர்ண நிற பலுான்கள் பறக்கவிடப்பட்டன.

பங்கேற்ற வி.வி.ஐ.பி.,க்கள்:
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் மனைவி குர்சரண் கவுர், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன். காங்., தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட, ஏராளமான வி.வி.ஐ.பி.,க்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.

No comments:

Post a Comment