Sunday, August 16, 2015

நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி : சுதந்திர திருநாளில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்!

Sunday, August 16, 2015
சென்னை: நான்காண்டு ஆட்சியில் தமிழகம் நாலாபுறமும் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:  . இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட தென்புலத்து வீரபாண்டிய கட்டபொம்மன்; புலியெனச் சீறிய பூலித்தேவன்; வீரமிகு மருது பாண்டியர்; தீரமிகு தீரன் சின்னமலை; தாய்நாட்டுக் கொடி காக்க தன்னை மாய்த்துக் கொண்ட கொடி காத்த திருப்பூர் குமரன்; தாய்நாட்டுக்காக தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட வீர வாஞ்சிநாதன்; பாட்டுக்கொரு புலவன் பாரதி; 
 
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; வீரமங்கை வேலு நாச்சியார்; வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதி வீரத் தாய் குயிலி; வட இந்தியாவைச் சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்துப் போற்றுவதற்கும்; அவர்களின் புகழை பாடுவதற்கும்; அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து ; இந்தச் சுதந்திரத் திருநாளை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்தின் இலக்கணம் என்ன என்பது ஒவ்வொருவரின் மனப்பாங்கை பொறுத்து அமைகிறது. இருப்பினும், சுதந்திரத்தின் அடித்தளமாக, ஆணிவேராக, அச்சாணியாக விளங்குவது பொருளாதாரச் சுதந்திரம். பொருளாதாரச் சுதந்திரம் என்பது இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும்; பிறரைச் சார்ந்திராமல் சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யும் வகையிலும்; அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுதலே ஆகும். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதும்;
 
சமூக ரீதியில் ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலையுமே; உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதை பறைசாற்றுவதாக அமையும். “ஏழை யென்றும் அடிமை யென்றும் ஸ்வனுமில்லை; சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பர் இந்தியாவில் இல்லையே!” என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளே சுதந்திரம் என்பதற்கான உள்ளார்ந்த பொருள். இதையே தான் நமது ஆன்றோர்களும் சான்றோர்களும் “ஏழை ஈடேற வேண்டும்; ஏழை உரிமை பெற வேண்டும்; சாதி பேதம் ஒழிய வேண்டும்; ஒற்றுமை மலர வேண்டும்” என்று கூறினர். பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற லட்சியத்தை இலக்காகக் கொண்டு; தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெறும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறது.
 
ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கும் அறிவை தரக்கூடிய கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைவருக்கும், கட்டணமில்லாக் கல்வி; ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள், உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடை நிற்றலைத் தவிர்க்கும் வகையில் பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
 
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 72,843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 182 தொடக்கப் பள்ளிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன உயர் கல்வியைப் பொறுத்த வரையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தேசிய சட்டப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment