Wednesday, July 22, 2015
சர்வதேச கொள்கைகளின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்கள் தேசிய நலன்களில் அக்கறையில்லாது செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கும் அனைவரும் மஹிந்த அணியினரேயாவர். கட்சிக்குள் இரண்டு குழுக்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ,
எமது ஆட்சியில் அரச வளங்கள் பாதுகாக்கப்பட்டது. அரசாங்க கொள்கையுடன் கூடிய வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. எமது உள்நாட்டு உற்பத்திகளுக்கான நிரந்த விலை நிர்ணயம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கையில் அனைத்தும் தனியார் மயப்படுத்தப்பட்டு விட்டது. இலங்கையின் உற்பத்திக்கான நிரந்தர விலை நிர்ணயம் இல்லாது போய்விட்டது. இவர்களது அரசியல் கொள்கை எப்போதும் சர்வதேச கொள்கையுடன்தான் உள்ளது. சர்வதேச பொருளாதார தன்மைகளின் அடிப்படையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகளை பலப்படுத்திக்கொண்டனரே தவிர நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் எவையும் முன்னேற்றம் காணவில்லை. ஆகவே இந்த நிலைமைகளை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். மக்களின் வாழ்வாதார நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் எமது அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தில் நாம் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்வோம். மக்கள் இம்முறை தேர்தலை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இப்போது பிளவு எதுவும் இல்லை. கட்சிக்குள் அனைவரும் ஒரு கொள்கையில் தான் உள்ளனர். கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்திய நபர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேறி எமது கட்சியை சுத்தப்படுத்தி விட்டார்கள்.
இப்போது கட்சிக்குள் இருக்கும் அனைவரும் மஹிந்த அணியினர் மட்டுமேயாவர். ஆகவே அனைவரினதும் தீர்மானங்களும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. கட்சியின் தலைமைத்துவம் கட்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதை நாம் மறுக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் தலைவர். ஆனால் அவர் தனித்து முடிவுகளை எடுப்பது கட்சியை பாதிக்கும் வகையில் அமையும்.
தலைவர் எப்போதும் கட்சியில் அனைவரினதும் கருத்துக்களுக்கும் செவிமடுக்க வேண்டும். அந்த வகையில் கட்சியின் முக்கியமான தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் எம் அனைவரினதும் தீர்மானத்தை கட்சியின் தலைவர் முன்னிலையில் தெரிவித்தோம். ஜனாதிபதி எமது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆகவே இப்போது கட்சிக்குள் பலமான ஒருமைப்பாட்டு கொள்கையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை அடிப்படையாக வைத்து எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்போம் என்றார்.

No comments:
Post a Comment