Wednesday, July 22, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாரையும் தாக்க முயற்சிக்கவில்லை: ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான்!

Wednesday, July 22, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாரையும் தாக்க முயற்சிக்கவில்லை என அவரது ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அக்குரஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி ஆதரவாளர் ஒருவரை தாக்க முயற்சித்தமை குறித்த காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி எவரையும் தாக்கவில்லை என ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆதரவாளர் மதுபோதையில் இருந்ததாகவும் அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஸ முயற்சித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்படுவதனைப் போன்று முன்னாள் ஜனாதிபதி எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், மஹிந்தவின் கைகளை இறுக்கிப் பற்றிப் பிடித்த காரணத்தினால் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே முயற்சித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு தேவையான வாகனங்கள் கையடக்கத் தொலைபேசிகள் போன்றன வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த வாகனம் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவால் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment