Wednesday, July 22, 2015
ராமநாதபுரம்,ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் சயனைடு குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.
உச்சிப்புளி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த இலங்கை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கிருஷ்ணகுமார் (33), ராமநாதபுரம் அருகே உள்ள நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சசிக்குமார் (28), உச்சிப்புளி அருகே தீயன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜேந்திரன் (44) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து. 75 சயனைடு குப்பிகள், 4 ஜி.பி.எஸ். கருவிகள், 300 கிராம் சயனைடு பவுடர், இந்தியப் பணம் ரூ. 46,124, இலங்கைப் பணம் ரூ.19,300 ஆகியன கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டன. போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: சசிக்குமார் காரை ஓட்டி வந்துள்ளார். காரில் வந்த கிருஷ்ணகுமார், திருச்சி அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர். இவர், கடந்த 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பாளராக இருந்து வந்ததாகவும், இலங்கையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தலைமை வகித்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும், ராமநாதபுரம், கேணிக்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment