Friday, July 24, 2015
ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் உருவாகினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதாளத்தில் வீழ்ந்து விடும்.எமது நாட்டின் வளங்களை தனியாருக்கு விற்பனை செய்வதே ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான பொருளாதார கொள்கையாகும் என தேசிய சுதந்திர முன்ண்ணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் வெள்ளை வான் கலாசாரத்தை கடந்த காலங்களில் யார் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெற்றி பெற்றதை பாதுகாப்போம்" என்ற ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் தொனிப்பொருளின் உண்மையான அர்த்தம் எந்தளவு இலஞ்சம் கொடுத்தாவது வெற்றி பெற்றதை பாதுகாப்பதாகும். அதாவது ஜனவரி 8ஆம் திகதி வெற்றிபெற உதவிய சகலருக்கும் இலஞ்சம் கொடுக்கவே தற்போது நடைபெறுகிறது.
அந்த வகையில் திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க இருக்கின்றனர். இந்த வருடத்துக்குள் சுயநிர்ணய உரிமையை வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாக சம்மபந்தன் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் நிர்வாக மாவட்டமொன்றை தருவதற்கு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடுகிறது. அதுமாத்திரமின்றி மக்கள் விடுதலை முன்ணணிக்கு 8 இலட்சம் ரூபாவுக்கு ஐ.ரி.என். மற்றும் லக்ஹன்ட சேவையில் நேரடி ஒளி, ஒலிபரப்புச் சேவை வழங்கப்படுகிறது.
மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இந்தியாவிலுள்ள பாரத் பெற்றோல் கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அன்று ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் தங்களது அரசாங்கத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு பாரிய முயற்சி செய்தார்கள். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அதனை தடுத்து நிறுத்தினார்கள்.
அதுமாத்திரமின்றி லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தின் அரச பங்குகளை விற்பனை செய்ய முற்படுகின்றனர். லிட்ரோகேஸ் கம்பனியை மீண்டும் செல்கேஸ் கம்பனிக்கும் சதோச நிறுவனத்தை காகீல்ஸ் நிறுவனத்திற்கும் விற்பனை செய்ய சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் நாட்டின் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தலை நிறுத்தியது. விழும் நிலையில் இருந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நாங்கள் உறுதிப்படுத்தினோம். இவ்வாறு பாதுகாத்த அரச சொத்துக்களை இவர்கள் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து இவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸாரால் தன்னியக்க ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் ஒரே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது எவ்வாறு நடந்தது.
வெள்ளை வேனின் உண்மை சம்பவம் வெளிப்பட்டதால் அதனை மூடி மறைப்பதற்கு ஜோன் அமரதுங்க இன்று வேறு கதைகளை கூறிவருகிறார். யாரை இலக்கு வைத்து இது நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனை சாதாரண விடயமாக பார்க்க வேண்டாம்.
எனவே எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் உருவாகினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடுவதுடன் நாட்டின் பொருளாதாரமும் பாரிய பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்றார்.


No comments:
Post a Comment