Wednesday, June 10, 2015
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்று கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஜெயசந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேல்முறையீடு செய்வதற்வான தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்துவிட்டது. இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவையும், உச்ச நீதிமன்றத்தில் வாதிட மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டிலையும் ஏற்கனவே நியமித்துவிட்டோம்.
அவர்கள் மேல்முறையீட்டு மனு, அதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரித்த வருகின்றனர். 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்றிருந்தபோது அந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுவித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியோர் பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒப்புதல் அளித்ததால், ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையில் சந்தேஷ் சவுட்டா உள்ளிட்ட சட்டத் துறை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
முதல்கட்டமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான அரசு தரப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை திரட்டிய ஆதாரங்கள், அரசு சான்று ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இதுதவிர நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள், குற்றவாளிகள் தரப்பு வாதத்தை நிராகரிக்க அவர் எடுத்துரைத்த வாதங்கள் ஆகியவற்றை ஒரு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் உள்ள அடிப்படை தவறுகள், கணித பிழை ஆகியவை விரிவாக அலசப்படுகிறது. மேலும் அரசு தரப்பின் வாதத்தை நிராகரித்த குமாரசாமி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது தொடர்பாகவும் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை கர்நாடக அரசு தயாரித்து வருகிறது.
இதற்கான பணிகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்து வருகிறார். ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இது தொடர்பாக ஆச்சார்யாவிடம் கேட்டபோது, “மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே எப்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தேதியை தெரிவிக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.

No comments:
Post a Comment