Wednesday, June 10, 2015

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா!

Wednesday, June 10, 2015
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 65 பேர் அடங்கிய படகு ஒன்றை அவுஸ்திரேலியாவிற்குள் வரவிடாமல் செய்வதற்காக அந்நாட்டு அதிகாரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த படகினை இந்தோனேசியாவிற்கு திருப்பி அனுப்பி வைப்பதற்காக இவ்வாறு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான டொலர்களை செலுத்தி இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட படகுப் பணியாளர்களுக்கு தலா 5000 அமெரிக்க டொலர்களை, அந்நாட்டு சுங்க அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இந்தோனேசிய அதிகாரிகள் குறித்த சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்த போது, இந்தப் பணம் அடங்கிய ஆறு பிளாஸ்டிக் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தோனேசிய காவல்துறையினர் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். எனினும், அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சு இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

இதேவேளை, படகில் பயணித்த படகுப் பயணிகளினால் நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஆறு படகுப் பணியாளர்களுக்கும் தலா 7000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் அனைத்து படகுப் பயணிகளும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவிற்கு திரும்பிச் செல்வதற்காக அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்தப் பணத்தை வழங்கியதாக பங்களாதேஸ் படகுப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment