Friday, January 9, 2015

நாட்டில் அமைதியைப் பேணவும்: ரணில் விக்ரமசிங்க!

Friday, January 09, 2015
நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும்  எந்தவித அரசியல் பழிவாங்கலும் இடம்பெறக் கூடாது எனவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
 
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இன்று மாலை மைத்திரிபால சிரிசேன புதிய ஜனாதிபதியாக பதவி யேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியை மக்களின் ஆணைக்கு தலைவணங்கி விட்டுக் கொடுப்பதாக தன்னிடம் இன்று காலை தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு வரலாற்று மனிதர் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறினார்.
புதிய அமைச்சரவையின் பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
 
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வார் எனவும் புதிதாக ஒருவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment