Thursday, January 29, 2015

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார்!

Thursday, January 29, 2015
இலங்கை::முப்படைகளின் கட்டளைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று (ஜன.28) பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார். பாதுகாப்புச் ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.  
இங்கு உரையாற்றிய அதிமேதகு ஜானாதிபதி, தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக அதிக வேலைப்பழு காரணமாக பாதுகாப்பு அமைச்சிற்கு சமூகமளிக்க முடியவில்லை எனவும் இன்று விஜயமளிக்க கிடைத்தமைக்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பை பேண வேண்டிய தேவை காணப்படுவதுடன் இதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பாரியளவிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டி நல்லாட்சியை கொண்டு செல்வதற்க்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், தாய் நாட்டுக்காக அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிஎம்யுடி. பஸ்நாயக, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment