Thursday, January 22, 2015

குடியரசு தினவிழா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பில் !

Thursday, January 22, 2015
சென்னை ::குடியரசு தினவிழா நெருங்குவதை முன்னிட்டு, நேற்று முதல் வரும் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினர், விமான நிலைய போலீசார், அதிரடிபடையினர், ஆயுதப்படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் என பல்வேறு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
 
நேற்று அதிகாலை முதல் 24 மணி நேரமும் தொடர்ந்து, விமான நிலைய கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனை பணியை தொடங்கியுள்ளனர். விமானங்களுக்குள் எரிபொருள் நிரப்பும் பகுதி, பாதுகாப்பு சோதனை நடத்தும் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் வருகை பகுதி உள்பட அனைத்து இடத்திலும் கூடுதலாக சுமார் 80 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு விமான பயணிகள் அனைவரும், பலகட்ட சோதனைகளுக்கு பின்னர், விமானங்களில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு நேற்று அதிகாலையில் இருந்து 30ம் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் வழியிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர். மொத்தத்தில் சென்னை விமான நிலையம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment