Wednesday, December 10, 2014

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம்!

Wednesday, December 10, 2014
திருப்பதி::திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வழியாக திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநில வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோபிநாத்ஜாட்டி, திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, தேவஸ்தான வரவேற்பு அதிகாரிகள் வெங்கட்டய்யா, தாமோதரம் மற்றும் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பிறகு இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையில் ராஜபக்சே கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை வழங்கினர்.
சாமி தரிசனம் முடித்து 4.30 மணியளவில் ராஜபக்சே வெளியில் வந்தார்.

விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொண்டு 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு காரில் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை செல்கிறார்.

ராஜபக்சே திருமலைக்கு வந்ததையொட்டி 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்–இன்ஸ்பெக்டர்கள், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆந்திரா வந்த தமிழக வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. அலிபிரி சோதனை சாவடியில் தமிழக வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்பட்டு, திருமலைக்கு அனுமதிக்கப்பட்டன.
 

No comments:

Post a Comment