Tuesday, December 2, 2014

துரதிஸ்டவசமாக கையாலாகாத்தன்மை கொண்ட வடக்கு மாகாண சபையினை வடமாகாண மக்கள் தெரிவு செய்ததனால் அதனை செயற்படுத்த முடியாமல் போய்விட்டது: வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!

Tuesday, December 02, 2014
இலங்கை::
துரதிஸ்டவசமாக கையாலாகாத்தன்மை கொண்ட வடக்கு மாகாண சபையினை வடமாகாண மக்கள் தெரிவு செய்ததனால் அதனை செயற்படுத்த முடியாமல் போய்விட்டது என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

அச்செழு வளர்மதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கு சான்றாக இங்குள்ள சிறார்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள் என்பவற்றை மனப்பாடம் செய்து மிகவும் திறமையாக கூறியுள்ளனர். இவ்வாறான ஆற்றலையும் திறனையும் சிறுவர்கள் பெறுவதற்கு காரணம் ஆசிரியர்களாகும். சமுதாயத்தை உருவாக்குவதில் முன்னோடியானவர்கள் அவர்களே. அவர்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதனால் தான் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவாக மாதாந்தம் 3,000 ரூபா. கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் அவர்களுக்கு நிரந்தர  நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.

துரதிஸ்டவசமாக கையாலாகாத்தன்மை கொண்ட வடக்கு மாகாண சபையினை வட மாகாண மக்கள் தெரிவு செய்ததனால் அதனை செயற்படுத்த முடியாமல் போய்விட்டது. வீராப்பு பேசி எம்மால் எதையும் சாதிக்க முடியாது. அமைதியாக இருந்துதான் சாதிக்க வேண்டும். அரசினால் பெருந் தொகையான நிதிகள் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு அவை செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. இங்கு முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் உள்ளடங்கலாக இன்னும் நிறைய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியும். அவ்வாறு செயற்படுத்துவதற்கான அரசியல் பலத்தை நீங்;கள் தான் எமக்கு வழங்க வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி சுதர்சினி கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் திரு. மோகனராஜ், கிராம சேவையாளர் திரு. சண்முகவடிவேல், வலி கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் திரு. த. றஜீவன், அச்செழு சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஜெயசிங்கம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அச்செழு கிராம ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment