Sunday, December 7, 2014

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிலைப்பாடு என்ன?

Sunday, December 07, 2014      
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதில் அக்கட்சிகளின் ஆளுகைக்குள் உட்பட்ட மக்கள் ஆர்வமாக உள்ளனர். இவ்விரு கட்சிகளினதும் ஆதரவாளர்களும், அக்கட்சிகள் சார்ந்த பொதுமக்களும் தமக்குள் ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்துவிட்டபோதிலும் அம்மக்கள் சார்ந்த கட்சிகளினது தலைமைகளும் தமது அறிவிப்பை மர்மமாக வைத்திருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இம்முறை அக்கட்சியின் தலைமை உட்பட அக்கட்சி சார்ந்த தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே தமது ஆதரவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களது ஆதரவு ஜனாதிபதி மஹிந்தவிற்கே எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பின்னடிப்பைக் காட்டுவதற்கு அரசுடன் பங்காளிக் கட்சியாகவுள்ள ஜாதிக ஹெல உருமைய கட்சியே காரணம் என அவர்கள் இதுவரை காலமும் கூறிவந்த காரணத்திற்கு இப்போது விடை காணப்பட்டுவிட்டது.
 
அவர்கள் தெரிவித்த இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உருமய கட்சி இப்போது பொது எதிரணிக்குள் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது. இதனால் ஒருவேளை பொது வேட்பாளர் வெற்றி பெற்றால்கூட இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண ஜாதிக ஹெல உருமய விடமாட்டாது. அதனால் எதிரணிக்கு தமிழ்க் கூட்டமைப்பினால் நிச்சயம் ஆதரவு வழங்க முடியாது. வழங்கினால் அவர்களது வார்த்தைகள் பொய்யானதாகிவிடும். ஒருவேளை ஆதரவு வழங்குவதாக அறிவித்தாலும் தமிழ் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 
அதனால் தமிழ்க் கூட்டமைப்பு பெரும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ்க் கூட்ட மைப்பிற்கு எந்தவிதமான தனிப்பட்ட பகைமையும் கிடையாது. உண்மையைக் கூறினால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்த அரசாங்கம் நிறையவே உதவிகளைச் செய்துள்ளது.
 
அத்தலைவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழவும், அவர்களது பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் ஐரோப்பிய நாட்டு பல் கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களைத் தொடரவும் ஜனாதிபதி நிறையவே உதவிகளைச் செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சிறு சிறு பிரச்சினைகளுக்குப் பிரதான காரணமாகவுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாக உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே சரியான தலைவர் என்பதுவும் அவர்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் இதுவரை காலமும் தடையாக இருந்ததாக அவர்கள் கூறிய ஜாதிக ஹெல உருமயவும் இப்போது விலகிச் சென்றுவிட்டது. இதேவேளை பொது எதிரணியின் பொது வேட்பாளரும் சமஷ்டி என்ற பேச்சிற்கு இடமில்லை. ஒற்றை ஆட்சிக்குள் பெளத்தத்திற்கு முன்னுரிமை என வலியுறுத்திக் கூறியுள்ளார்.
 
சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என்பது போல மிகவும் அலட்சியமாக பொது வேட்பாளர் தெரிவித்த பின்னரும் தமிழ்க் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸஞிம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் அவர் பின்னால் சென்றால் தமிழ்,
 
முஸ்லிம் மக்கள் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உண்மையில் தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து நாட்டை சரியாக வழிநடத்திவரும் ஜனாதிபதிக்கு இம்முறையும் ஆதரவு வழங்கி தமது இதர பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பதே தமிழ், முஸ்லிம் மக்களது எண்ணமாகும்.
இது தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக நிறைவேற வேண்டும் என்பது அவர்களது விரும்பமாகவும் உள்ளது. அதனை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பமாகவே அம்மக்கள் இத்தேர்தலை நோக்குகின்றனர். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸஞிம் இணங்கி வராவிட்டால் தாமே நேரடியாக தமது விருப்பை ஜனாதிபதிக்கு அம்மக்கள் நிச்சயம் தெரிவிப்பார்கள்.
 
இந்நிலையைத் தடுக்க தமிழ்க் கூட்டமைப்பும், மு.காவும் எப்படியாவது உடனடியாக ஒரு முடிவினை எடுத்தே ஆக வேண்டும். தமது அறிவிப்பை பகிரங்கமாகத் தெரிவித்து இழந்து போய்க் கொண்டிருக்கும் தமது மக்கள் ஆதரவைச் சரி செய்து கொள்ள வேண்டும்.
 
இவ்விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பு இதுவரை காலமும் மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த காரணத்தினால் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் அவதூறாகப் பேசி வந்தனர். மாற்றம் வந்தால் எல்லாம் நடந்துவிடும் என்பது இவர்களிடையே காணப்பட்ட மாயை ஆக இருந்தது. இப்போது மாற்றம் தேவையில்லை, ஆட்சி நீடிப்பே தேவை என்பதை உணர்ந்துள்ளதால் உடனடியாகத் தமது அறிவிப்பை வெளிப்படையாக தெரிவிக்காமல் மெளனமாக தமிழ் மக்களுக்கு சமிக்ஞை ஒன்றைக் காட்டியுள்ளனர். இதனைத் தமிழ் மக்களும் நன்கு புரிந்துள்ளனர். இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். காலந் தாழ்த்தியேனும் தமிழ்க் கூட்டமைப்பு இம்முடிவிற்கு வந்தமையை உண்மையில் சமாதானத்தை விரும்பும் மக்கள் வரவேற்பர்.
 
இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அக்கட்சி இந்த அரசாங்கத்துடனும், ஜனாதிபதியுடனும் ஆரம்பம் முதல் நல்ல உறவையே பேணி வருகிறது. அரசாங்கம் மு.காவிற்கு முக்கியமான அமைச்சுக்களை வழங்கிக் கெளரவித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அவர்கள் இணைந்து கொண்ட காலம் முதல் தம்மாலான சகலவற்றையும் தமது சமூகத்திற்காக பெற்றுக் கொடுத்துக் கொண்டே வருகின்றனர்.
 
இந்நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள் முதல் ஆளுங் கட்சியின் பங்காளிகளாவுள்ள மு.கா, அ.இ.ம.கா, தே.கா போன்ற சகல பிரதான கட்சிகளினூடாகவும் அரசாங்கம் முஸ்லிம்களுக்குத் தேவையான சகலவற்றையும் செய்து வருகின்றது.
 
இதன் காரணமாகத்தான் அண்மையில் கருத்துத் தெரிவித்த மு.காவின் அரசியல் விவகார பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எஸ்.எம்.ஹரீஸ், தமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து விட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இதிலிருந்தே தமது தேவைகளை நிறைவேற்றும் இந்த அரசாங்கத்திற்கே அதாவது ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவிற்கே மு.கா ஆதரவு என்ற நிலைப்பாட்டினை எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவினைப் போன்று இதனையும் முழு நாட்டு மக்களுமே நிச்சயம் வரவேற்பர்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதில் நிலவி வந்த எதிர்பார்ப்பை அக்கட்சிகளின் தலைமைகள் தெரிவிப்பதற்கு முன்னதாகவே அக்கட்சிகளை ஆள்பவர்களான மக்கள் தெரிவித்துவிட்டனர். ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் அம்மக்களது முடிவு நிச்சயம் சரியானது. அது எக்காலத்திலும் வீண்போகாது என்பதே எமது கருத்தாகும்.,

No comments:

Post a Comment