Sunday, December 7, 2014

இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை பற்றி 2 நாளில் முடிவு: இலங்கை மந்திரி அறிவிப்பு!

Sunday, December 07, 2014      
ராமேசுவரம்::இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களையும், 82 படகுகளையும் விடுவிக்க 2 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மந்திரி உறுதி கூறினார்.

இலங்கை தொலைத்தொடர்பு மந்திரி பிரபாகணேஷ் கேரள மாநிலம் முதலமடை சுவாமி சுனில்தாசை சந்திக்கவும், திருச்சூரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவும் கேரளா வந்திருந்தார்.

இதுகுறித்து அறிந்த ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், மீனவ மகளிர் சங்க தலைவர் இருதயமேரி, இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர்  திருச்சூர் சென்று இலங்கை மந்திரியை சந்தித்து மனுகொடுத்தனர்.

அந்தமனுவில் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்யவேண்டும். என்ஜின் பழுதாகி, கடல்கொந்தளிப்பு, காற்றில் திசைமாறி இலங்கை கடல் பகுதிக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது வழக்குபதிவு செய்யக்கூடாது. படகுகளை பிடிக்கக்கூடாது. இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களையும், 82 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட இலங்கை மந்திரி பிரபாகணேஷ் கூறியதாவது:-

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது, அத்துமீறி நுழைவது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான நடவடிக்கை மேற்கொண்டு 2 நாட்டு மீனவர்களும் கடல்பகுதியில் மீன்பிடிக்க வழிவகை மேற்கொள்ளவேண்டும்.

அவ்வாறு இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மீன்பிடித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களையும், 82 படகுகளையும் விடுதலைசெய்வது குறித்து இலங்கை அதிபருடன் பேசி 2 நாட்களில் விடுதலைக்கான முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment