Thursday, November 13, 2014
சென்னை::மலேசியாவில் உள்ள பினாங்கு நகரில் 3 நாள் நடந்த அனைத்துலக தமிழ் மாநாட்டில் புலிகளுக்கு ஆதராவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பல நாட்டு பிரதிநிதிகள் உரையாற்றினர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், 5 நாள் சுற்றுப் பயணம் முடித்து, வைகோ நேற்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை வரவேற்க காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்திருந்தனர். அப்போது, வைகோவை புகழ்ந்து கோஷம் எழுப்பப்பட்டது. பிரமாண்டமான வாழ்த்து பேனர்களும் வைக்கப்பட்டன.வைகோவை சாரட் வண்டி மூலம் ஜிஎஸ்டி சாலை வழியாக ஊர்வலமாக அழைத்து செல்ல மதிமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, சாரட் வண்டி வரவழைக்கப்பட்டது. தொண்டர்களும் கூடினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மீனம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஊர்வலத்திற்கு தடை விதித்தனர். அப்போது, போலீசாருடன் வைகோவும், மதிமுக தொண்டர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஊர்வலம் தொடர்பாக மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, மல்லை சத்யா, டிஆர்ஆர் செங்குட்டுவன்,
பாலவாக்கம் சோமு உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோத கும்பலில் அங்கம் வகித்தல்), 188 (அரசு ஊழியர் உத்தரவை மீறுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மீனம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகிமை வீரனை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளார்.

No comments:
Post a Comment