Monday, November 17, 2014

இந்தியாவில் நல்லாட்சி நடக்கிறது: தொழில் துவங்கினால் மாற்றம் நிச்சயம்: ஆஸி. தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு!

Monday, November 17, 2014
 பிரிஸ்பேன்::இந்தியாவில் நல்லாட்சி நடக்கிறது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளில் சிறப்பான மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலிய பன்னாட்டு நிறுவனங்களின் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி பிரிஸ்பேன் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கருப்பு பணத்தை மீட்க இந்தியாவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில் இருந்து இன்று காலை சிட்னி சென்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றார். அதன்பிறகு நரேந்திரமோடி தற்போது அங்கு சென்றுள்ளார்.

 இதற்கிடையில், சிட்னி செல்வதற்கு முன்னதாக பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவின் முன்னணி தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்களிடையே மோடி பேசியதாவது: இந்தியாவில் வர்த்தக கொள்கைகள் வெளிப்படையாகவும், தெளிவானவையாகவும் உள்ளன. எங்கள் நாட்டில் முதலீடு செய்யும் வர்த்தகர்களுக்கு நடைமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும், மென்மையான போக்குடனும் செய்து தர தயாராக உள்ளோம். இந்தியாவில் வர்த்தக மேம்பாட்டிற்காக முன்பு நடைமுறையில் இருந்த தேவையில்லாத சட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை கழித்து கட்ட முடிவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் நல்லாட்சி நடக்கிறது. வர்த்தகம் தொடங்குவதற்கான அனுமதி சுருக்கமாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிதாகவும் நடக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

 நல்ல நிர்வாகத்தின் அடையாளம் என்பது மாற்றத்தை தொடங்கி வைப்பதுதான்.  தற்போது நீங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கினால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். எனவே, இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரவேண்டும். மேலும், மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உலக நாடுகள் தங்களது உற்பத்தியை தொடங்கவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டமும் உள்ளது. அதே போல் 50 பெருநகரங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டமும், இதை மேலும் 500 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. அதே போல் 2019க்குள் அனைவருக்கும் மருத்துவ வசதி, 2022க்குள் அனைவருக்கும் வீடு, மின்சாரம் அனைத்தும் செய்து தர இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் குஜராத்தில் நடைபெற்ற  எரிசக்தி வட்டமேஜை மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாண வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். 2015ம் ஆண்டு குஜராத்தில் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் குஜராத் மட்டுமின்றி, கொல்கத்தா, டெல்லி என இந்தியாவின் எந்த பகுதிக்கும் வேண்டுமானாலும் உங்களது வர்த்தக பிரதிநிதிகளை அனுப்பி வையுங்கள். வர்த்தகம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர இந்திய அரசு தயாராக உள்ளது. சோலார் மற்றும் எரிசக்தி போன்றவற்றில் கவனம் செலுத்த இந்தியா விரும்புகிறது.  ஆஸ்திரேலியாவில் 16 பில்லியன் டாலர் அளவுக்கு சுரங்க தொழிலில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண்துறையில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி தேவை.  தகவல் தொழில் நுட்பத்திலும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறது. சுற்றுலா துறையை பொறுத்த அளவில் ஆஸ்திரேலியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய முதலீட்டாளர்கள் நிச்சயம் இந்த துறையில் பங்களிப்புகளை செய்ய தயாராக உள்ளனர்.  அதே போல் இந்தியாவில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களும் சிறு நகரங்களில் உணவு உற்பத்தி, சுற்றுலாத்துறை போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

No comments:

Post a Comment