Tuesday, November 11, 2014

பெய்ஜிங் நகரில் சீன அதிபருடன் ஜப்பான் பிரதமர் முதல் முறையாக சந்திப்பு!

Tuesday, November 11, 2014
பெய்ஜிங்::சீன அதிபர் ஜின்பிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் முதல் முறையாக பெய்ஜிங் நகரில் நேற்று சந்தித்து பேசினார்கள்.

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையிலும், போர்க்கால வரலாறு தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு முறை இல்லை.

குறிப்பாக கிழக்கு சீன கடல் பகுதியில் தனது நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் வளம் மிக்க சிறுசிறு தீவுகளை சீனா உரிமை கொண்டாடுவதை ஜப்பான் விரும்பவில்லை. இதனால் சீனாவில் தொழில் முதலீடுகளை செய்வதை கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் வரை ஜப்பான் குறைத்துக்கொண்டு விட்டது.

இந்த நிலையில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 2 நாள் மாநாடு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.

இதில் ஆசிய பிராந்திய நாடுகளில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று முன்தினமே பெய்ஜிங் வந்து சேர்ந்து விட்டார்.

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நேற்று பெய்ஜிங் நகரின் மக்கள் அரங்கத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஷின்சோ அபே நேற்று காலை மக்கள் அரங்கிற்கு முன்கூட்டியே வந்து காத்திருந்தார்.

அதன்பின்னர் அங்கு வந்த ஜின்பிங், இறுகிய முகத்துடன் அபேயுடன் கைகுலுக்கினார். சிறிய புன்னகையை கூட அவர் உதிரவிடவில்லை. மேலும், அபேயுடன் கைகுலுக்கியபோது ஜின்பிங் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதைத் தொடர்ந்து 2 தலைவர்களும் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு நாடுகளும் இணைந்து அமைதி வழியில் முன்னேற்றம் காணவும், விழிப்பான ராணுவ மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவது எனவும் ஒப்புக்கொண்டன.

இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர நட்புறவு நிலவுவதற்கு முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் பொதுநோக்கு அவசியம் என்பதை இரு நாடுகளும் உறுதி செய்யவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது சீன அதிபர் ஜின்பிங், அபேயிடம் கூறுகையில் பக்கத்து நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஷின்சோ அபே கூறும்போது, ஜப்பானில் கடந்த கால அரசுகள் மேற்கொண்ட கொள்கை முடிவுகளையே தனது அரசும் தொடரும் எனவும், அமைதியான மேம்பாட்டுக்கு செயலாற்றும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இருநாடுகளுக்கும் இடையே முன்பு செய்து கொள்ளப்பட்ட 4 அம்ச ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாகவும் ஜின்பிங்கிடம் அபே தெரிவித்தார்.

ஷின்சோ அபே ஜப்பான் பிரதமராக பதவியேற்ற கடந்த 2 ஆண்டுகளில் ஜின்பிங்கை சந்தித்து பேசியது, இதுவே முதல் முறையாகும். எனவே இரு தலைவர்களின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சீனாவும், ஜப்பானும் முறையே உலகின் 2-வது மற்றும் 3-வது பொருளாதார பலம் வாய்ந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment