Monday, November 17, 2014

புலம்பெயர் புலிகளின் தூண்டுதலால் அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் பாதுகாப்புக் கதிரையில் இருந்து கோத்தபாய ராஜபக்ஷவையும் வீழ்த்துவதற்கே பல சக்திகள் முயற்சி: விமல் வீரவன்ச!

Monday, November 17, 2014
இலங்கை::
அரசாங்கத்தின் ஆட்சி பீடத்தில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் பாதுகாப்புக் கதிரையில் இருந்து கோத்தபாய ராஜபக்ஷவையும் வீழ்த்துவதற்கே பல சக்திகள் முயற்சி செய்கின்றன.
 
பொது எதிரணியின் பின்னணியில் புலம்பெயர் மற்றும்  புலிகளின் தூண்டுதல் உள்ளதென குற்றம் சுமத்தும் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்க்கட்சித் தலைவர் ரணில், சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே பொது எதிரணி களத்தில் குதிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
 
தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று பத்திரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது பல தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை களமிறக்கி நாட்டினை சீரழிக்க முயற்சித்தனர். அந்த எதிர்பார்ப்பு தோல்வியடைந்தது. இப்போதும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி ஜனாதிபதி ராஜபக் ஷவின் ஆட்டத்தை கலைக்க பல முயற்சிகள் எடுக்கின்றனர்.
 
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி தான் இந்த முறை எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றி தனது அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜே. வி. பி. கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் தம்வசப்படுத்தி தனது வலுவான அரசாங்கத்தினை உருவாக்கவே முயற்சிக்கின்றனர். எனினும் இவை அனைத்தையும் தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது. அதாவது புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆசையை நிறைவு செய்வதற்கான எதிர்பார்ப்பே இதுவாகும்.
 
புலம்பெயர் புலிகளின் முயற்சி
 
தனி ஈழத்தினை உருவாக்கும் நோக்கத்தில் இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற முயற்சியில் புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் இங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகளுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றனர் .விடுதலைப் புலிகளை பழிவாங்கியமைக்கான பழி தீர்க்கும் புலி ஆதரவாளர்களின் திட்டத்திற்கு அமையவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
 
ஆட்சியை வீழ்த்த சதி
 
அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி பீடத்தினை சரிப்பதற்கும் பாதுகாப்பு கதிரையில் இருந்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை வீழ்த்துவதற்குமே புலம்பெயர் விடுதலைப் புலி தமிழ் அமைப்புக்களும் அவர்களுக்கு விலை போயுள்ள அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இவர்களின் எதிர்பார்ப்பு இலங்கையில் மீண்டுமொரு ஆயுத கலாச்சாரத்தினை உருவாக்குவதும் உலக வரைபடத்தில் இலங்கை எனும் நாட்டினை சிதைவடைய வைப்பதுமே. இந்த நோக்கத்திற்கு சிங்கள பௌத்த மக்களையும் உட்படுத்தவே ஐக்கிய தேசியக் கட்சியும் பெளத்த தேரர்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதென்ற நாடகமாடுகின்றனர்.
 
தமிழ் முஸ்லிம் வாக்குகளே இவர்களின் நம்பிக்கை.
 
தமிழ் - முஸ்லிம் வாக்குகள் முழுமையாக எதிரணிக்கு சேரும் சிங்கள வாக்குகளை பெற்றுக்கொண்டால் போதும் என்ற நம்பிக்கையில் பொது எதிரணி களத்தில் குதிக்கின்றது. இவர்களின் எதிர்பார்ப்பும் வடக்கு கிழக்கிற்கு ஏற்ற அரசாங்கத்தை அமைப்பதே தவிர முழு நாட்டிற்குமான அரசாங்கம் அல்ல. எனவே சிங்கள பௌத்த மக்கள் இந்த சூழ்ச்சிக்கு ஏமாந்து விடக் கூடாது.
ரணில் - சம்பந்தன் கூட்டணி
 
அதேபோல் தற்போது நாடும் பொது எதிரணியும் பொது கொள்கைப் பத்திரமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே முன்னகர்த்தப்படுகின்றது.
 
வடமாகாணத்திற்கான பொலிஸ் அதிகாரம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது காணி அதிகாரம் 13 வது திருத்தமும் வடக்கு கிழக்கின் தனித்த ஆட்சி என்ற கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியினை உருவாக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறுதியில் சம்பந்தனின் கனவினை நனவாக்கவே உதவுகின்றனர். எனவே சிங்கள மக்கள் தமது வாக்கு யாருக்கு என்பதை தீர்மானிக்க வேண்டும்.
 
கடந்த இரு ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் மிகச் சரியான முடிவினை எடுத்தார்கள். அந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.   

No comments:

Post a Comment