Wednesday, November 19, 2014

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபாவின் 63வது பிறந்த தினம்!

Wednesday, November 19, 2014
சென்னை::தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி,
எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன்
இன்று நவம்பர் 19. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களாலும்; மற்றும் கட்சியி;ன் நெருங்கிய நண்பர்களாலும் எஸ் ஜி தோழர் என அழைக்கப்பட்ட எமதினிய தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமான இன்று அவர் தொடர்பான மறக்க முடியாத நினைவுகளை கட்சியின் தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
தோழர் நாபா அவர்களை முதன் முதலாக நான் சந்தித்து முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்;தோடி விட்டன. அவரோடு இணைபிரியாத நண்பனாக, அரசியற் தோழனாக, கட்சியில் அவரின் தலைமையின் கீழ் தொண்டனாக பதினெட்டு ஆண்டுகள் வாழும் – சேர்ந்து செயற்படும் பெரும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் என்றும் எந்தச் சூழலிலும் பெருமைப் படுவேன். விசேடமாக இன்றைய தினத்தில் அவர் பற்றி நான் அறிந்தவை, அவரிடம் நான் கண்டவை, அவரோடு இணைந்து செயற்பட்டதில் நான் உணர்ந்தவை கற்றவை என்பதையெல்லாம் மீட்டுப் பார்க்கிற போது ஒரு அற்புதமான நண்பனோடு, அரியதொரு தோழனோடு, உள்ளத்தாலும் உருவத்தாலும் உயர்ந்த மனிதனோடு பழக எனக்கு வாய்பபைத் தந்ததற்காக வரலாற்றுத் தெய்வத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
 
தோழர் நாபா அவர்கள் சாதாரண பாமரமகன் தொடக்கம் கட்சியின் தோழர்கள், நண்பர்கள், ஏனைய இயக்கத்தவர்கள், பெரும்படிப்பு படித்தோர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட இலங்கை இந்திய நாடுகளைச் சேர்ந்த பழம் பெரும் அரசியற் தலைவர்கள் வரை அவர் பழகிய எல்லோரிடமும் பெரும் நன்மதிப்பைப் பெற்றவராக வாழ்ந்தார். தோழர் நாபாவின் தனிப்பட்ட செயற்பாட்டால் நொந்தவர்களும் கிடையாது, அவரோடு நெருங்கிப் பழகுவதற்கு அஞ்சியவர்களும் கிடையாது. அவரோடு யாரும் பழகலாம், அவரோடு யாரும் எப்படியும் விவாதிக்கலாம், அவரின் முகத்துக்கு முன்னாலேயே அவரை விமர்சிக்கலாம் அவரை யாரும் எப்போதும் சந்திக்கலாம் என்ற வகையில் ஒரு சிறந்த திறந்த புத்தகமாகவே தோழர் நாபா அவர்கள் வாழ்ந்தார்.
 
தோழர் நாபா எந்தக் கட்டத்திலும் தனது தலைமை பற்றிய பிரமிப்பான ஒரு மாயையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்ததுமில்லை அவ்வாறான ஒன்றை அவர் எப்போதும் விரும்பியதுமில்லை. அவர் கட்சியின் தோழர்
கள் மத்தியிலும் கட்சியின் ஆதரவாளர்கள் மத்திலும் சாதாரண மனிதனாக, தோழனாக. நண்பனாகவே நடந்து கொண்டார்.
 
அவரோடு பழகியவர்கள், அவரைத் தெரிந்தவர்கள் ஒரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருந்தாலும் கூட அவரது அரசியல் ஆளுமையைப் பாராட்டாதவர்கள் கிடையாது: அவரது அமைதியும் கண்ணியமும் மனிதாபிமானமும் கொண்ட செயற்பாடுகளை புகழாதார் இல்லை: அவரின் சிந்தனைத் தெளிவு, அயராத உழைப்பு, எந்த நெருக்கடிக்கும் கலக்காத உள்ளம் கண்டு வியக்காதவர்கள் கிடையாது.
 
1990ம் ஆண்டு சென்னையில் வைத்து தோழர் அவர்கள் பாசிச புலிகளால் படுகெலை செயயப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமது இரங்கற் செய்தியில் தமது தாயார் மறைந்த இந்தியப் பிரதமர் அவர்களின் பிறந்த தினமும் தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமும் ஒரே தினத்தில் வருவதைக் குறிப்பிட்டு இருவரும் மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்து பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியதை இங்கு தொட்டுக் காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்..
 
தோழர் நாபா அவர்கள் இலங்கைத் தமிழர்களின் அரசி;யல் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தை சமூகரீதியான உரிமைகளுக்குகான போராட்டங்களோடு இணைத்தார்: அவர் தமிழர்களின் போராட்டத்தை இலங்கையின் அனைத்து மக்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் விடுதலையின் முதற்கட்டமாகக் கொண்டே வழி நடத்தினார்: அவர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வை சர்வதேசரீதியான மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களின்; ஒரு பாகமாகவே கருதினார். அவரின் தீர்க்கதரிசமான முடிவுகளும் தீர்மானகரமான முயற்சிகளும் இன்றைக்கும் இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் அரசியற் தீர்வுக்கான மைய விடயங்களாகவே உள்ளன.
 
தமிழர்களிடையேயுள்ள இயக்கங்கள், கட்சிகள் மற்றும் குழுக்களிடையே ஐக்கியம், தமிழர்களின் போராட்டத்துக்கும் மலையகத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தமிழர்களின் தலைவர்களுக்கும் முஸ்லிம் மக்களின் தலைவர்களுக்குமிடையே ஐக்கியம், தமிழர்களிடையே உள்ள முற்போக்கு சக்திகளுக்கும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் வகையான போராட்டம், தமிழர்களின் மத்தியிலுள்ள புரட்சிகர சக்திகளுக்கும் சர்வதேச ரீதயான புரட்சிகர சக்திகளுக்கும் இடையே கைகோர்ப்பு என பரந்து விரிந்த அரசியல் மனோபாவத்துடனேயே தோழர் நாபா எப்போதும் செயற்பட்டார். அவர் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை மாறாக மக்களுக்காகவே மண்ணை நேசித்தார். அவர் தமிழுக்காகப் போராடவில்லை தமிழர்களின் வாழ்வு உரிமைகளுக்காகப் போராடினார், அவர் மானுட குலத்தின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தார்.
அவர் நாடுகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் வர்க்க மற்றும் சமூக பொருளாதார முரண்பாடுகளுக்கும் நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளுக்கும் இடையே குழப்பமான கருத்தையோ நிலைப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. தமிழர்களின்; உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதாரமாக இருக்க வேண்டுமென உழைத்தார்: இந்திய முற்போக்கு சக்திகளின்; ஆதரவைக் கட்சி பேதமின்றித் திரட்டினார்: தமிழர்களுக்கு இந்திய அரசின் துணையி;னுடைய தேவையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தீர்க்கமாகச் செயலாற்றினார்: தமிழர்களின் போராட்டத்தின் முன்னேற்றத்துக்கு சர்வதேச புரட்சிகர மற்றும் முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்;து குரல் கொடுக்க வேண்டியதன் தேவையைப் புரிந்து கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவர் எந்தக் கட்ட்திலும் தமிழகத்தின் உறவையோ இந்தியாவின் துணையையோ சர்வதேச நட்புகளையோ வெறும் பணத்துக்கும் ஆயுதங்களுக்குமான உறவாகக் கணித்ததில்லை. நட்புகள் பயன்படுத்தப்படுவதற்கான தந்திரங்களல்ல மாறாக பரஸ்பர நலன்களின் சமநிலையைப பேணுவதால் வலுப்படுத்தப்படுபவை என்பதை தோழர் அவர்கள் எப்போதும் தெளிவாகப் புரிந்தே செயற்பட்டார். 
 
தோழர் நாபா அவர்களின் சிந்தனை வழியில் தமிழர்களின் தலைவர்கள் நடந்திருந்தால், அவரின்  செயன்முறை வழிகாட்டல்களை தமிழர் சமூகம் உரிய காலகட்டத்தில் புரிந்து ஏற்றிருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைக்கு உலகில் எங்குமே உண்மையான நண்பர்கள் இல்லை என்று ஏற்பட்டிருக்கும் நிலை எற்பட்டிருக்கமாட்டாது. இன்னமும்; காலம் முற்றாகக் கடந்து விடவில்லை. தோழர் நாபா அவர்களின் அரசியற் சிந்தனைகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடிவுக்கு அவசியமானவைகளாகும்.
 
புலியிசத்தின் போலித்தனமான எச்சங்களால் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு செயற்திறன் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ்ச் சமதாயத்தில் முற்போக்கான சிந்தனைகளும் புரட்சிகரமான அரசியலும் முன்னணிக்கு வரவேண்டுமானால், மக்களின்; உரிமைகள் நிலைநாட்டப்படவும் சீரான வாழ்வை நோக்கி முன்னேற்றங்கள் ஏற்படவும் வேண்டுமானால் அந்த அடிப்படைகளில் புதிய தலைமுறையினர் அணிதிரட்டப்பட்டு வழிநடத்தப்பட வேண்டுமானால் பிரபாகரன்களல்ல மீண்டும் பத்மநாபாக்களே உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த நாளில் எமது சத்தியமாகட்டும்.
 
தோழர் வரதன் .

No comments:

Post a Comment