Wednesday, November 12, 2014
சென்னை::ராமேசுவரம் தங்கச்சி
மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்
ஆகிய 5 பேரும் கடந்த 2011–ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் போதை பொருள்
கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் மீதான
வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த மாதம் 30–ந்தேதி கொழும்பு
உயர்நீதிமன்றம், 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து
தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள்
மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியல்
கட்சிகளும் இந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தின.
இந்த
நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபர்
ராஜபக்சேயுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியா– இலங்கை
இடையே உள்ள கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக
மீனவர்களை இந்திய சிறைச் சாலைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையே
தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனையை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில்
இந்தியா நேற்று மேல் முறையீடு செய்தது. தமிழக மீனவர்களுக்கு வாதாட
இலங்கையைச் சேர்ந்த வக்கீல் அனில் சில்வா என்பவரை இந்தியத் தூதரகம் ஏற்பாடு
செய்துள்ளது.
தமிழக மீனவர்களிடம் இருந்து போதை பொருள் எதுவும்
கைப்பற்றப்பட வில்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வாதாட அனில் சில்வா
திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த மேல்
முறையீட்டு வழக்கை நடத்த மத்திய வெளியுறவு துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த
வழக்கு நடைபெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்
தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முக்கிய
திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 5 பேரும் இன்னும் ஒரு
வாரத்துக்குள் விடுதலையாகும் வகையில் அந்த திருப்பம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில்
தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருப்பவர் பிரபா
கணேசன். இவர் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசினார். பிறகு
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5
தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்கள், அவர்களது 79
படகுகளை விடுவிக்க வேண்டும் என்று நான் ராஜபக்சேயிடம் வலியுறுத்தினேன்.
அதற்கு அவர், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுக்கு
பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
மன்னிப்பு
வழங்கப்படும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் 5 பேரும் 2 அல்லது 3 நாட்களில்
விடுதலையாகி விடுவார்கள் என்றும் என்னிடம் ராஜபக்சே தெரிவித்தார். அதே
சமயத்தில் இந்த தண்டனையை எதிர்த்து இந்திய தூதரகம் மேல் முறையீட்டு வழக்கை
நடத்தினால் அது முடிய 6 மாதங்களுக்கு மேல் ஆகி விடும் என்றார்.
எனவே
இது தொடர்பாக தனது மன்னிப்பு வழங்கும் முடிவு பற்றி கொழும்பில் உள்ள இந்திய
தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும்படி அதிபர் என்னிடம் கேட்டுக்
கொண்டார். நானும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு இலங்கை மந்திரி பிரபா கணேசன் கூறினார்.
அமைச்சர்
பிரபா கணேசன் தங்களை தொடர்பு கொண்டு ராஜபக்சே மன்னிப்பு வழங்க தயாராக
இருப்பது பற்றி கூறியதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும்
ஒத்துக் கொண்டனர். இதுகுறித்து அவர்கள் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ராஜபக்சேயின் நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைக்கும் வகையில் மேல்முறையீடு திரும்ப பெறப்படும் என்று
கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்
முடிவு எடுக்க உள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த
விவகாரத்துக்காக தேவை இல்லாமல் நிறைய பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று
ராஜபக்சே ஏற்கனவே மோடியுடன் பேசும்போது கூறியதாக தெரிகிறது. அதன்
தொடர்ச்சியாக ராஜபக்சே தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை
செய்யும் திடீர் முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
ராஜபக்சேயின்
இந்த முடிவால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விரைவில்
விடுதலை ஆக வாய்ப்பு உருவாகியுள்ளது. இது பற்றிய விபரங்களை இலங்கை மந்திரி
பிரபா கணேசன், ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாசை நேற்று போனில்
தொடர்பு கொண்டு பேசி தெரிவித்தார்.
இதனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment