Wednesday, November 12, 2014
ராமேசுவரம்::தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ராஜபக்சே
ஒப்புதல் வழங்கியதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேஷ் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்
தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட், வில்சன்,
எமரிட் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக கொழும்பு நீதிமன்றம்
அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தது.
இதை கண்டித்து தமிழகம்
முழுவதும் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்த பிரச்சினையில் பிரதமர்
நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம்
தொலைபேசியில் பேசினார். அப்போது அவர்கள் மீனவர்கள் பிரச்சினை குறித்து
விரிவாக ஆலோசித்தனர்.
இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5
மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புதல்
வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மீனவர்களின் தூக்கு
தண்டனையை எதிர்த்து இலங்கை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய
அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகளை இலங்கைக்கான
இந்திய தூதர் சின்கா விரைவுப்படுத்தினார். இந்த மேல் முறையீடு மனுவை
விசாரித்து முடிவெடுக்க 6 மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.
கேரளாவை
சேர்ந்த முதலைமட சுவாமிகள் சுனில்தாஸ், ரவிசங்கர்ஜி ஆகியோர் பிரதமர்
நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் பிரபா
கணேஷ் ஆகியோரை சந்தித்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை
செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து இலங்கை தொலை தொடர்பு
மந்திரி பிரபா கணேஷ் மீனவர்கள் பிரச்சினை குறித்து ராஜபக்சேவிடம்
பேசியுள்ளார். அப்போது பிரபா கணேஷ், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5
மீனவர்களையும், சிறையில் இருக்கும் 24 மீனவர்களையும், 79 படகுகளையும்
விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது ராஜபக்சே
முதற்கட்டமாக தூக்கு தண்டனை மீனவர்கள் 5 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி
விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மந்திரியிடம் தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
இத்தகவலை ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் தேவதாசிடம்
இலங்கை மந்திரி பிரபா கணேஷ் தெரிவித்து உள்ளார். ஆனாலும் இது தொடர்பான
எந்தவித அதிகாரபூர்வமான தகவல் இலங்கை அரசிடமிருந்து வெளியாகவில்லை.
பிரதமர்
நரேந்திர மோடி நேரடியாக இதில் தலையிட்டுள்ளதால் மீனவர்கள் விரைவில்
விடுதலை செய்யயப்படுவார்கள் என்ற நம்பிக்கை மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment