Sunday, November 16, 2014

தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு!

Sunday, November 16, 2014
இலங்கை::தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.
 
இது தொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து உயர்நிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கோணங்களிலும் இந்த விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படலாம். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது, இந்தியாவுடன் 2010ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பது, கடைசியாக அவர்களை அதிபரின் மன்னிப்பு மூலம் விடுவிப்பது என்ற தொடர்ச்சியான நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
 
 இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தொடர்பான அம்சத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. முதலில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வாபஸ் பெறப்பட வேண்டும். ஏனெனில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது தண்டனை குறைப்பு அல்லது விடுதலை குறித்து முடிவெடுக்க முடியாது. மீனவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விளைவுகள் குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. ஏனெனில் இது அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டு அல்ல. போதைக்கடத்தல் குற்றம் என்றார் அவர்.

No comments:

Post a Comment