Sunday, November 16, 2014

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட, தூக்கு தண்டனை ரத்து: தமிழிசை அறிக்கை!

Sunday, November 16, 2014
சென்னை::தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட, தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்ற ஆறுதலான செய்தி நமக்கு கிடைத்துள்ளது. மீண்டுவரும் நம் மீனவ சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
 
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சட்டப்பூர்வமாகவும், ராஜிய தூதரக உறவுகள் மூலமாகவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மிக கவனமாக மேற்கொண்டது.
 
பிரதமர் நரேந்திர மோடி முயற்சியின் விளைவாக இந்திய அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற பாரதீய ஜனதா அரசு மிகுந்த அக்கறையுடன் பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதன் பயனாக இந்த வெற்றி கிட்டியுள்ளது,
 
பாரதீய ஜனதா கட்சியின் நேர்மையான முயற்சிகளை, தமிழகத்தில் சிலர் நாடகம் என்றும், நடிப்பு என்றும் பழித்து பேசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகளை பாதிக்கும் வகையில் அவர்கள் பரப்பிய வதந்திகளை பொய்யாக்குமாறு இன்று நமது மீனவ சகோதரர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்ற ஆறுதல் கிடைத்துள்ளது.
 
பாரதீய ஜனதா கட்சி அரசு, மீனவ சகோதரர்கள் கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் கூறி வந்தது. மீனவ சகோதரர்கள் தங்களை வருத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டு இதை அரசியலாக்கி குளிர்காய நினைக்கும் சக்திகளுக்கு துணை போகாமல் மத்திய அரசின் முயற்சிகளை புரிந்து கொண்டு போராட்டங்களை நிறுத்தவேண்டும் என பாரதீய
ஜனதா அரசு கூறியது தற்போது உண்மையாகி உள்ளது.
 
ஆனால் இதே சூழலில் கடந்த 2011–ல் அப்போது ஆட்சியில் காங்கிரஸ் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தமிழக மீனவர்களை காப்பாற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக மக்களின் சார்பாக தமிழக பாரதீய ஜனதா கட்சி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment