Sunday, November 16, 2014

5-வது ஒரு நாள் போட்டி: மாத்யூஸ் சதத்தால் இலங்கை 286 ரன்கள் குவிப்பு!

Sunday, November 16, 2014
ராஞ்சி::இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதிலாக புதுமுக வீரர் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் யாதவுக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும். அதேபோல் இலங்கை அணியில் டிக்வெல்லா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ரகானே, ராயுடு, கோலி, ஜாதவ், உத்தப்பா, ஸ்டூவர்ட் பின்னி, அக்ஷர் படேல், அஸ்வின், கர்ன் சர்மா மற்றும் தவால் குல்கர்னி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: டிக்வெல்லா, தில்ஷன், சந்திமல், ஜெயவர்த்தனா, மேத்யூஸ், திரிமன்னே, பெரேரா, பிரசன்னா, எரங்கா, மெண்டிஸ் மற்றும் கமகே ஆகியோர் இடம்பெற்றனர்.

டிக்வெல்லா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிக்வெல்லா 4 ரன் எடுத்த நிலையில் குல்கர்னி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து தில்சானுடன் சந்திமால் இணைந்தார். இவர் 5 ரன்னில் அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு தில்சானுடன், ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடினார்கள். என்றாலும் தில்சான் (35), ஜெயவர்தனே (32) ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் மாத்யூஸ், துணை கேப்டன் திரிமன்னேவும் ஜோடி சேர்ந்தனர். தங்களது பொறுப்பை உணர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். முதலில் நிதானமாக விளையாடிய மாத்யூஸ் பின்னர் அதிரடியாக விளையாடினார். அதனால் மாத்யூஸ் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் திரிமன்னே 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு  128 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சதம் அடித்த பின் மாத்யூஸ் பந்துகளை அடிக்கடி சிக்சர் கோட்டிற்கு அப்பால் அனுப்பினார். இதனால் இலங்கையின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. மாத்யூஸ் 116 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

No comments:

Post a Comment