Sunday, November 16, 2014

இலங்கையில் போரின் போது: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இனிமேல் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: ஐ.நா விசாரணைக்குழு!

Sunday, November 16, 2014
இலங்கை::இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் சேகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
 
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு, மீறல்கள் குறித்து சாட்சியங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை கடந்த ஒக்ரோபர் 30ம் திகதியுடன் முடிவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும், சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை ஒக்ரோபர் 30ம் திகதியுடன் முடிவுக்கு வந்தாலும், சூழ்நிலை கருதி தாமதமாக வரும் சாட்சியங்களை ஐ.நா விசாரணைக் குழு நிராகரிக்காது என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில தெரிவித்திருந்தார்.
இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பின்கதவு வழியாக ஐ.நா விசாரணைக்குழு சாட்சியங்களைப் பெற முனைவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்தில், சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை முடிவுக்கு வந்துள்ளதாகவும், இனிமேல் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment