Wednesday, November 12, 2014
157 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள்
விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அண்மையில்
புதுச்சேரியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த 157 இலங்கைப்
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த படகில் பயணித்தவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களின் ஒவ்வொருவரினதும் மெய்யான புகலிடத் தேவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய கொன்சோல் ஜெனரல் சேன் கெலி தெரிவித்துள்ளார்.
மெய்யாகவே புகலிடம் கோரியிருந்தார்கள் என்பது உறுதியானால் அவர்கள் நவுரு தீவுகளில் குடியேற்றப்படுவர் எனவும், இல்லாவிட்டால் நாடு கடத்தப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலிய நோக்கிப் புறப்பட்டு இடையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 1200 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான படகுப் பயணங்களுக்கு அவுஸ்திரேலியா இடமளிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான வழிமுறைகளில் புகலிடம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்க அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment