
Saturday, November 08, 2014
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 10 முகாம்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இலங்கையில் நடந்த இனக்கலவரத்திற்கு பிறகு, தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக இந்தியா வந்தனர். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அகதிகளாக வந்தவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு குடும்பத்தலைவர் பெயர் மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றுடன் தனியாக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.இந்த அடையாள அட்டை முறையை மாற்றி நவீனப்படுத்த தற்போது அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி குடும்பத்தலைவர் பெயரில் ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, நாட்டரசன்கோட்டை, தாயமங்கலம், காளையூர், தேவகோட்டை ஒக்கூர் ஆகிய ஆறு இடங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 1,074 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 468 பேர் உள்ளனர். இந்த முகாம்களில் குடும்பத்தலைவர் பெயரில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.
இந்த கார்டில் குடும்ப தலைவர் பெயர், பிறந்த தேதி, இந்தியா வந்த தேதி, வேறு முகாம்களில் இருந்து அனுப்பப்பட்டவரா, குற்ற பின்னணி உள்ளவரா, தொழில், வருமானம், குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, கைரேகை, புகைப்படம் என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.நாடு முழுவதும் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில், இந்த ஸ்மார்ட் கார்டை கணினியில் செலுத்தி விவரங்களை அறிந்து கொள்ளலாம். முதல் கட்டமாக 10 முகாம்களில் சோதனை ரீதியாக ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் செயல்பாட்டை பொறுத்து தமிழகம் முழுவதும் இந்த முறை அமலாகும் என அகதிகள் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment