Sunday, October 19, 2014

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை!

Sunday, October 19, 2014
இலங்கை::அண்மையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.

புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலான கருத்தரங்கு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்ட போது, இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர். ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என இராணுவம் அறிவித்துள்ளது.

நிகழ்வினை குழப்பும் நோக்கில் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு ஊடகவியலாளர் செயற்குழு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

நிகழ்வில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களை கொலை செய்வதாகவும் சிலர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த அச்சுறுத்தல்களுக்கும் இராணுவப்படையினருக்கும் தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதே இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment